பீகாரில் ஷாக்..! ஆளும்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்கள் இருவர் சுட்டுக் கொலை..!

29 November 2020, 3:28 pm
Gun_SHot_UpdateNews360
Quick Share

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அமரேந்திர குமார் பாண்டேவின் மூன்று ஆதரவாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் காயமடைந்து, ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவரை கிராமவாசிகள் பிடித்து அடித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தேக நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜ்பூர் பஜாரில் இரண்டு நண்பர்களுடன் ஒரு கடையில் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் தேவேந்திர பாண்டே தேநீர் அருந்திக் கொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அப்போது தேவேந்திரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோபால்கஞ்ச் துணை போலீஸ் சூப்பிரண்டு நரேஷ் பாஸ்வான், துப்பாக்கிச் சூட்டின் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பொதுமக்களிடம் சிக்கிய இருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய மற்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகாரின் ஆளும்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர் மீது நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால், பீகார் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 27

0

0