ரயில் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி: அடுத்தடுத்து சிறப்பு ரயில்களை அறிவித்து ரயில்வே வாரியம் அதிரடி!!!

2 October 2020, 3:41 pm
train - update news360
Quick Share

பண்டிகை காலத்தையொட்டி மேலும் 200 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இந்தியாவில் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை விரைவு ரயில்களுக்கு காலவரையற்ற ரத்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 12ம் தேதி 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து ஜுன் 1ம் தேதி 200 சிறப்பு ரயில்களும், செப்டம்பர் 12ம் தேதி 80 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

இதற்கிடையே, இம்மாத இறுதியில் விஜய தசமி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளும், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையும் வர உள்ளதால் மேலும் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இதுகுறித்து அனைத்து ரயில்வே கோட்ட பொது மேலாளர்களையும் அழைத்து பேசியுள்ளோம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வதுடன், மாநில அரசின் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும். தற்போதைக்கு 200 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0