காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி..? 23 தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம்..! நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு..!

23 August 2020, 10:18 am
sonia_gandhi_rahul_gandhi_updatenews360
Quick Share

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பிரச்சினை தொடர்பான விவாதத்தில், நாளை காங்கிரஸ் செயற்குழு (சி.டபிள்யூ.சி) ஒரு பெரிய மோதலைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால தலைவராக கோலோச்சிய சோனியா காந்தி வயது மூப்பு காரணமாகவும், ராகுல் காந்திக்கு தலைமைப் பொறுப்பை வழங்கிடவும் 2017’இல் காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து 2017’இல் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகள் மேலும் அதிகரித்த வண்ணமே இருந்தன.

இதற்கு முத்தாய்ப்பாக 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2014’இல் பெற்ற இடங்களை விட குறைவாகப் பெற்று மிக மோசமான நிலையை எட்டியது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல் தங்களையும் தங்கள் குடும்ப வாரிசுகளையும் முன்னிறுத்திக்கொள்ளவே வேலை செய்கிறார்கள் எனக் கூறி, கடந்த வருடம் தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் குழப்பம் நிலவியதை அடுத்து, இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை நியமனம் செய்தனர். ஆனால் கட்சிக்கு முழுநேரத் தலைவரை நியமிக்காததால் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 23 தலைவர்கள், எழுதியுள்ள கடிதத்தில், ஒரு முழு அளவிலான தலைவரை நியமனம் செய்யாததால், தலைமை மீதான நிச்சயமற்ற தன்மை தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்து, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்று வாதிட்டனர்.

கட்சிக்கு முழு நேர சுறுசுறுப்பான தலைமை தேவை என்று அவர்கள் வாதிட்டனர். மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் நாளைய சி.டபிள்யூ.சி கூட்டத்தில் முக்கிய விவாதப்பொருளாக இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த கடிதம் காங்கிரஸ் கட்சியின் 2014 மக்களவைத் தோல்வி குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடைக்கால கட்சித் தலைவராக ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் ராகுல் காந்தி பதவி விலகிய பின்னர் கடந்த ஆண்டு அவர் ஏற்றுக்கொண்ட பதவியை சி.டபிள்யூ.சி சந்திப்பு நெருங்கி வருகிறது.

இந்த கடிதத்தில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ் பப்பர், மிலிந்த் தியோரா, சந்தீப் தீட்சித், ரேணுகா சவுத்ரி மற்றும் மணீஷ் திவாரி உள்ளிட்ட உயர் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களும் அவற்றின் செயல்பாடுகளும், காங்கிரஸ் தலைவரின் உரை மற்றும் இரங்கல் நிகழ்வுகளுக்காக மட்டுமே மாறிவிட்டன என்று தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால் அதிருப்தியை சமாளிக்க, நாளைய கூட்டத்தில் என்ன பேசப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 28

0

0