குலாம் நபியை தொடர்ந்து காங்கிரசுக்கு குட்-பை சொன்ன மேலும் 3 தலைவர்கள்… அதிர்ச்சியில் டெல்லி..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 5:41 pm
Quick Share

மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மேலும் 3 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகத்தினால் ஏற்பட்ட அதிருப்தியால், அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும், கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்திரா காந்தி காலத்தில் இருந்து காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து திடீரென விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கட்சியில் இருந்து விலகிய அவர், ஜம்மு – காஷ்மீரை மையமாகக் கொண்டு புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். எனவே, அவர் தேசிய அரசியலை விட்டுவிட்டு, மாநில அரசியலில் கவனம் செலுத்த தீர்மானித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், குலாம் நபி ஆசாத்தின் சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி விட்டனர். அதுமட்டுமில்லாமல், காங்கிரசில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகி உள்ளனர். முன்னாள் துணை சபாநாயகர் குலாம் ஹைதர் மாலிக் மற்றும் முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் பகத் ஆகியோர் விலகி உள்ளனர்.

இதேபோல, முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் ஆசாத்தை சந்தித்தனர். அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத்துக்கான ஆதரவை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Views: - 482

0

0