அரசுக்கு 1000 இ-மெயில் அனுப்பிய குடும்பம்: 5 ஆண்டுக்கு கேள்வி கேட்க தடை விதித்து உத்தரவு..!!

17 January 2021, 11:27 am
RTI - updatenews360
Quick Share

குஜராத்: குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், 5 ஆண்டுக்கு எந்த துறைக்கும் கேள்வி கேட்டு விண்ணப்பிக்க கூடாது என தடைவிதிக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தில் சுகாதாரா துறையில் பிரிவு-3 பணியாளராக பணியாற்றி வரும் பெண்மணி தில்ஹாரி. இவர் பிரிவு-2 பணியாளர்களுக்கான அரசு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அந்த குடியிருப்பை பிரிவு-2 அதிகாரிக்கு அரசு ஒதுக்கியது.

இதனால் தில்ஹாரியை அந்த குடியிருப்பில் காலி செய்ய உத்தரவிட்டது. ஆனால் அந்த குடியிருப்பிலிருந்து காலி செய்வதை தவிர்க்கும் நோக்கில், தில்ஹாரி மற்றும் அவரது கணவர் மற்றும் மாமியார் பல்வேறு துறைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெயில்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 21 விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளார்.
தில்ஹாரியின் குடும்பத்தினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கூடுதல் தகவல்களை பெறுவதை தடுக்கும் வகையில், குஜராத் மாநில தலைமை தகவல் ஆணையர் தாகூர் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், தில்ஹாரி, அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் தகவல்அறியும் உரிமை சட்டத்தின்கீழ், எந்தவொரு நியமிக்கப்பட்ட பொது தகவல் அலுவலர் முன் எந்தவொரு தகவல் அறியும் உரிமை மனுவையும் தாக்கல் செய்தவற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் சமயத்தில் அதிகாரிகளை துன்புறுத்துவதற்காக மதிப்புமிக்க சட்டத்தை தில்ஹாரி குடும்பத்தினர் தவறாக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநில தலைமை தகவல் ஆணையரின் இந்த நடவடிக்கை தகவல் அறியும் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சட்டத்தின்கீழ் குடிமக்களுக்கு தடை விதிக்கும் எந்தவொரு பிரிவும் இல்லை. இந்த உத்தரவில், குஜராத் மாநில தகவல் ஆணையர் நடவடிக்கை சட்டத்துக்கு அப்பாற்பட்டது என்று ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Views: - 9

0

0