எங்கே போனது 320 டோஸ் தடுப்பூசிகள்..! ராஜஸ்தான் மருத்துவமனையிலிருந்து களவாடப்பட்டதா..? பரபர பின்னணி..!

14 April 2021, 8:05 pm
Covaxin_UpdateNews360
Quick Share

கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ராஜஸ்தான் கூறி வரும் நிலையில், அம்மாநில தலைநகரமான ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரின் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள கன்வதியா மருத்துவமனையில் நடந்த இந்த திருட்டு குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர் மற்றும் உள்ளூர் போலீசாரின் தகவல்களின்படி, பாரத் பயோடெக்கின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் 320 டோஸ் கன்வதியா அரசு மருத்துவமனையின் குளிர் சேமிப்பு கிடங்கிலிருந்து காணாமல் போயுள்ளது.

ஏப்ரல் 11’ஆம் தேதி மருத்துவமனைக்கு இந்த டோஸ்கள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஏப்ரல் 12’ஆம் தேதி அவற்றைத் தேடியபோது, ​​பெறப்பட்ட 320 டோஸ்களில் ஒன்றையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சாஸ்திரி நகர் காவல் நிலைய அதிகாரி திலீப் சிங், மருத்துவமனையில் நிறுவப்பட்ட கேமராக்களின் சி.சி.டி.வி காட்சிகளைப் பயன்படுத்தி தங்கள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி கண்டுபிடிக்க மருத்துவமனை ஊழியர்கள் தவறியதால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காணாமல் போன தடுப்பூசி குறித்து மருத்துவமனையின் ஆண் செவிலியர் ஹிரலால் வர்மா புகார் அளித்த பின்னர், விசாரணை தலைமை கான்ஸ்டபிள் ஹர்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்வதியா மருத்துவமனையின் பதிவேட்டை போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர், மேலும் மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் விசாரிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில், காணாமல் போன தடுப்பூசி அளவுகள் கறுப்பு சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கை சுகாதாரத் துறையும் ஒரு பக்கம் விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.

கடந்த வாரம் தான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி அடுத்த 2 நாட்களில் காலியாகிவிடும் என்று கூறி பரப்பரப்பைக் கிளப்பியிருந்தார். ராஜஸ்தானில் தடுப்பூசி பற்றாக்குறையைத் தடுக்க மாநிலத்திற்கு மேலும் 30 லட்சம் டோஸ் வழங்குமாறு அசோக் கெலாட் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காணாமல் போயுள்ளது மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 41

0

0