உதான் திட்டத்தின் கீழ் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை..! 2 ஆம் உலகப்போர் காலத்து விமான நிலையம் அசாமில் மறுகட்டமைப்பு..!

8 May 2021, 8:39 pm
fly_big_in_world_war_ii_airport_assam_updatenews360
Quick Share

1984’ஆம் ஆண்டு முதல் பயன்படாமல் இருந்த அசாமின் இரண்டாம் உலகப் போர் காலத்து ருப்சி விமான நிலையம் இன்று மீண்டும் ஃப்ளைபிக் விமானத்தின் வணிக விமானம் தரையிறக்கம் மூலம் செயல்படத் தொடங்கியது.

குவஹாத்தியில் இருந்து வந்ததும், விமானத்திற்கு விமான பீரங்கி வணக்கம் வழங்கப்பட்டது. இருபத்தி நான்கு பயணிகள் இதில் பயணம் செய்தனர். இப்போதைக்கு செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்தில் நான்கு நாட்கள் விமானம் குவஹாத்தி-ரூப்சி-கொல்கத்தா பாதையில் விமானங்களை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மே 5’ஆம் தேதி, விமான நிறுவனம் தனது விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தது.

மத்திய அரசின் ஆர்.சி.எஸ்-உதான் திட்டத்தின் கீழ் வழக்கமான விமான சேவைகள் இன்று தொடங்கப்பட்டன. விமான நிலைய அதிகாரிகள் இந்த நாளை வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று வர்ணித்தனர்.

உள்ளூர் எம்.எல்.ஏ. நிஜானூர் ரஹ்மான் வரலாற்றின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு மாறியதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். “மேற்கு அசாமில் வாழும் நம் அனைவருக்கும் இது ஒரு வரலாற்று தருணம். இந்த சேவை மக்களின் நலனுக்காக நீடிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

ஏடிஆர் -72 வகை விமானங்களை இயக்க ரூ 70 கோடி செலவில் இந்த விமானநிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் மறுவடிவமைத்தது. 3,500 சதுர மீட்டர் பரப்பளவில் விமான நிலைய முனையத்தை நிர்மாணிப்பதும் இந்த வேலையில் அடங்கும்.

திட்டத்தின் மறு அபிவிருத்திக்கு 2019 ஆம் ஆண்டில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார். விமான நிலையம் 337 ஏக்கர் பரப்பளவில் செயல்படுகிறது மற்றும் ஓடுபாதை 1.8 கி.மீ. நீளம் கொண்டது ஆகும்.

மாவட்ட தலைமையகமான துப்ரியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கவுரிபூருக்கு அருகில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் மேற்கு அசாம் மாவட்டங்களின் பயணிகளுக்கு, குறிப்பாக துப்ரி, கோக்ராஜர், சிராங் மற்றும் பொங்கைகான் பயணிகளுக்கு பயனளிக்கும்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நேச நாட்டுப் படைகளுக்கு ஆயுதங்கள், மனித சக்தி மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதற்காக ஆங்கிலேயர்களால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. அமெரிக்க விமானப்படை இதை சீனா-பர்மா-இந்தியா தியேட்டரில் பயன்படுத்தியது.

பிராந்திய விமான நிறுவனமான வாயுட் 1980’களில் இங்கு வணிக விமான சேவையை இயக்கியது. ஆனால் 1984’இல் சேவைகளை வாபஸ் பெற்றது. பின்னர், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வடகிழக்கு கவுன்சிலின் கூட்டு முயற்சியால் மாநில அரசு அதை புதுப்பிக்க சில முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவிய நிலையில், தற்போதைய மோடி-சோனோவால் கூட்டு முயற்சியில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.

Views: - 152

0

0