தொடர் போலீஸ் விசாரணை.. இரு குழந்தைகளோடு குடும்பத்துடன் ரயில்முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை!!

3 November 2020, 7:00 pm
Quick Share

திருப்பதி : நகைக்கடையில் 4 கிலோ தங்க ஆபரணங்கள் திருட்டு போன விவகாரத்தில் போலீசாரின் தொடர் தொல்லை காரணமாக கடை ஊழியர் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலாவில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நான்கு கிலோ தங்க ஆபரணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கடையில் வேலை செய்து வந்த ஊழியர் அப்துல் சலாம் என்பவரை போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீனில் விடுதலையாகி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருடைய வீட்டுக்கு வந்த போலீசார் ஆபரணங்கள் கொள்ளை போனது தொடர்பாக அப்துல் சலாம், அவருடைய மனைவி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். கொரோனா காரணமாக வருமானம் இல்லாமல் நிலைகுலைந்து போயிருந்த அப்துல்சலாம் குடும்பத்தினர், தொடர் போலீஸ் தொல்லை காரணமாக கடும் விரக்தி அடைந்தனர்.

இந்த நிலையில், தாங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்காக வாங்கியிருந்த ஆட்டோவில் ஏறிய அப்துல் சலாம், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் ரயில் தண்டவாளம் இருக்கும் பகுதிக்கு சென்று, சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவத்தில் உடல்பாகங்கள் தனித்தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் நான்கு பேரும் பரிதாபமாக மரணம் அடைந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே போலீசார், விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 38

0

0

1 thought on “தொடர் போலீஸ் விசாரணை.. இரு குழந்தைகளோடு குடும்பத்துடன் ரயில்முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை!!

Comments are closed.