ஐந்து பேரை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை..! பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு..!

22 August 2020, 12:05 pm
BSF_UpdateNews360
Quick Share

பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராமத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லையை கடக்க முயன்ற ஐந்து நபர்களை எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பி.எஸ்.எஃப்’இன் 103’வது பட்டாலியனின் வீரர்கள் டார்ன் தரன் மாவட்டத்தில் பிகிவிந்த் துணைப்பிரிவின் தால் கிராமத்திற்கு அருகே இந்த ஊடுருவல்காரர்களை சுட்டுக் கொன்ற நிலையில், சம்பவ இடத்திலிருந்து ஒரு ஏ.கே.சீரிஸ் ரக துப்பாக்கி மற்றும் ஒரு துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் டால் எல்லை புறக்காவல் நிலையத்தின் அருகே எல்லையின் மறுபுறம் வேலிக்கு குறுக்கே சந்தேகத்திற்கிடமான அசைவுகளை அவர்கள் கவனித்தனர். அப்போது இரண்டு பேர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பாகாப்புப் படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி தொடர்ந்து முன்னேறினர். இதனால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் ஐந்து சடலங்களைக் கண்டனர்.

“தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானியர்களா என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரு ஏ.கே.-சீரிஸ் ரக துப்பாக்கி மற்றும் ஒரு ரக்ஸாக் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் முழுமையாக முடிந்த பிறகே எல்லை தாண்ட முயன்றவர்களின் நோக்கம் குறித்து சொல்ல முடியும்.” என்று பி.எஸ்.எஃப் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Views: - 30

0

0