கார் ஓட்டி அசத்திய 90 வயது பாட்டி! வைரல் வீடியோ
29 January 2021, 8:53 amமஹாராஷ்டிராவைச் சேர்ந்த 90 வயது பாட்டி கார் ஓட்டும் வீடியோ கிளிப், சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்குள் இருக்கும் திறமையை கண்ட நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்த பாதல்பூரை சேர்ந்தவர், கங்காபாய் மிர்குடே (வயது 90). 1930 ஆம் ஆண்டு பிறந்த கங்காபாய்க்கு கார் ஓட்ட தெரியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான், தனது பேரனிடம் இருந்து, கார் ஓட்ட கற்றுக் கொண்டார். தனது ஆர்வத்தால், இயல்பாக ஓட்ட பழகிவிட்டார்.
கங்காபாயின் பேரன் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதனை தனது பாட்டியிடம் காட்டி ஆசிரவாதம் வாங்க அவர் வந்திருக்கிறார். அப்போது, அந்த காரை, தான் ஓட்டப் போவதாக கூறிய கங்காபாய், மிக திறமையாக காரை ஓட்டியிருக்கிறார். இதனை கண்ட அவரது பேரன் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்.
பாட்டி கார் ஓட்டியதை தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்த அவரது பேரன், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், பாட்டியின் மன உறுதியை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பாட்டியின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘கங்காபாய் பாட்டிக்கு, ஓட்டுனர் உரிமம் இல்லை. விரைவில் அவருக்கு பிறந்த நாள் வர வரவிருக்கிறது. அப்போது பாட்டிக்கு, ஓட்டுனர் உரிமத்தை பரிசாக அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாட்டி கூறுகையில், ‘‘சாதிக்க வயது ஒரு தடையே இல்லை. நான் கார் ஓட்ட கற்றுக் கொள்ள விரும்பினேன். எனக்கு பேரன் அதனை கற்றுக் கொடுத்தான். நான் நம்பிக்கையுடன் காரை ஓட்டுகிறேன்’’ என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
0
0