இருபிரிவினர் மாறி மாறி அடித்துக் கொள்ளும் விநோத தடியடி திருவிழா! பலர் படுகாயம்!!

27 October 2020, 11:11 am
Clash Festival - Updatenews360
Quick Share

ஆந்திரா : கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மல்லேஸ்வர சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு தடியடி உற்சவம் நடைபெற்றதில் பலர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர் கட் மலைப்பகுதியில் இருக்கும் மல்லேஸ்வர சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவின்போது அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இருதரப்பினர் ஆக பிரிந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது தடிகளால் தாக்கி கொள்வது வழக்கம்.

இந்த தடியடி போட்டியில் வெற்றி பெறும் பிரிவினர் அந்த ஆண்டு உற்சவத்தை நடத்தும் பொறுப்பை ஏற்பார்கள். மல்லேஸ்வர சுவாமி கோவில் தடியடி உற்சவத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு உற்சவம் நடத்த தடை விதித்த கர்னூல் மாவட்ட போலீசார் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இது தவிர கடந்த ஒரு மாத காலமாக கொரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகள் பற்றி அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார், பொதுமக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக 1500 போலீசாரை பயன்படுத்தி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதற்காக கடந்த ஒரு மாத காலமாக அந்த பகுதியில் பொதுமக்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

ஆனால் போலீசாரின் அறிவுரை, 144 தடை உத்தரவு, கொரோனா கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தையும் புறம் தள்ளி சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கைகளில் தடி, தீ வட்டிகள் ஆகியவற்றுடன் அங்கு திரண்டனர்.

கோவிலுக்கு வரும் வழியில் ஏராளமான சாலை தடுப்புகளை அமைத்து பக்தர்கள் வருகையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பக்தர்கள் வாகனங்களை கைவிட்டு காட்டுப் பகுதிகள் வழியாக கோவிலை அடைந்து தடியடி உற்சவத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் எண்ணிக்கையை விட அதிக அளவில் பக்தர்கள் இருந்தனர்.

இதனால் உற்சவம் நடைபெற்றபோது போலீசார் வெறும் பார்வையாளராக மட்டுமே நின்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற தடியடி உற்சவத்தில் இரு தரப்பினரும் தடிகளால் தாக்கிக் கொண்டதில் பலர் படுகாயமடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தடியடி உற்சவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அந்த பகுதியில் அரசு சார்பில் முதலுதவி சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுபோல் நடைபெறாது என்று கருதிய அரசு நிர்வாகம் முதலுதவி சிகிச்சை மையங்களை ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு போலீசார் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 50 பேர் மட்டுமே தடிகள், தீவட்டிகள் ஆகியவற்றை தவிர்த்து உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்தனையையும் மீறி லட்சம் பேர் எவ்வாறு கலந்து கொண்டனர் என்று போலீசார் தற்போது விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 14

0

0