“எந்த நாடா இருந்த என்ன? வீரன் எப்போதும் வீரன் தான்”..! பாகிஸ்தான் ராணுவ வீரரின் கல்லறையை உயிர்ப்பித்த இந்தியா..!

Author: Sekar
16 October 2020, 2:10 pm
pakistan_army_personnel_rave_updatenews360
Quick Share

பாகிஸ்தானியரின் சேதமடைந்த கல்லறையை அலங்கரித்து மீண்டும் மீட்டெடுப்பதன் மூலம், ஒரு சிப்பாய் முதலில் ஒரு சிப்பாய் மற்றதெல்லாம் பிறகு தான் என்ற சிறந்த தொழில் தர்மத்தை கடைபிடிக்கும் உலகின் மிகச்சிறந்த ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவம் நிரூபித்துள்ளது.

மீட்கப்பட்ட கல்லறை மறைந்த மேஜர் முகமது ஷபீர் கானின் கல்லறையாகும். 1972’ஆம் ஆண்டில் இந்திய ராணுவ வீரர்களால் அவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் மூன்றாவது மிக உயர்ந்த இராணுவ விருதான சீதாரா-இ-ஜுரத்தை முகமது ஷபீர் கான் பெற்றுள்ளார்.

மறைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் கல்லறையை மீட்டெடுக்கும் போது, ​​ஸ்ரீநகரைச் சேர்ந்த இராணுவத்தின் சினார் கார்ப்ஸ், ஒரு வீரர், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மரியாதைக்குரியவர் என்று தெரிவித்துள்ளது.

சினார் கார்ப்ஸ், சீரமைக்கப்பட்ட கல்லறையின் புகைப்படத்தை ட்வீட் செய்து, அதில் 05 மே 1972, 1630 எச் 9 சீக்கியர்களின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்ட சீதாரா-இ-ஜுரத் மேஜர் முகமது ஷபீர் கானின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

“இந்திய ராணுவத்தின் மரபுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க, சினார் கார்ப்ஸ் பாகிஸ்தான் இராணுவத்தின் சீதாரா-இ-ஜுரத் மேஜர் முகமது ஷபீர் கானின் சேதமடைந்த கல்லறையை மீண்டும் உயிர்ப்பித்தது.” சினார் கார்ப்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது.

“வீழ்ந்த ஒரு சிப்பாய், அவர் எந்த நாட்டினர் என்பதைப் பொருட்படுத்தாமல், மரணத்திற்கு பின் மரியாதைக்கு தகுதியானவர். இந்திய ராணுவம் இந்த நம்பிக்கையுடன் நிற்கிறது. இது உலகத்திற்கான இந்திய ராணுவம்” என இராணுவம் ஒரு டிவீட்டில் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் செயலானது கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. 2020 ஜனவரியில், பாகிஸ்தானின் பார்டர் ஆக்சன் குழு இந்தியாவின் ஒரு போர்ட்டரைத் கொன்று தலையை பிய்த்து எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பாகிஸ்தானின் பார்டர் ஆக்சன் குழு என்பது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தில், ஒரு இந்திய இராணுவ ஜவானும், ஒரு எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) தலைமை கான்ஸ்டபிளும் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது உடல்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் மே 1, 2017 அன்று சிதைக்கப்பட்டன.

எதிரிகளை வீழ்த்தி வீரத்தை வெளிப்படுத்தும் இந்திய ராணுவம், எதிரி நாட்டின் ராணுவத்தினரே ஆனாலும் மரணத்திற்குப் பின் உரிய மரியாதை செலுத்தும் உன்னத பண்பை மீண்டும் வெளிப்படுத்தியிருப்பது உலக நாடுகளிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Views: - 43

0

0