கர்நாடகாவில் ‘ஜெலட்டின்’ ஏற்றிச்சென்ற லாரி வெடித்து சிதறி 8 பேர் பலி: தலைவர்கள் இரங்கல்..!!

22 January 2021, 12:12 pm
karanataka
Quick Share

சிவமோகா: கர்நாடகாவில் சக்திவாய்ந்த வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிவமோகா தாலுகா அப்பலகெரே அருகே உள்ளது ஹுனசூரு கிராமம். இந்த கிராமம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி உள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு 50க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

ரயில்வே கிரசர் அருகே சென்ற போது அந்த லாரி திடீரென வெடித்துச் சிதறியது. இதில், லாரியில் இருந்த அனைத்து வெடி பொருட்களும் வெடித்து சிதறின. இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். ஓட்டுனர் உள்பட 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அண்டை மாவட்டங்களான சிக்மகளூர் மற்றும் உத்தர கன்னடாவில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்., எம்.பி., ராகுல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0