ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி..! நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..! என்சிபி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
22 September 2020, 3:27 pmசெப்டம்பர் 8’ம் தேதி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (என்சிபி) கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனுவை மும்பையில் உள்ள சிறப்பு போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மேலும் நடிகையின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரியா சக்ரவர்த்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே மற்றும் ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் என்.டி.பி.எஸ் வழக்கில் ஜாமீன் மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என்று கூறினார்.
“இது நாளை தேதி விசாரணைக்கு வரும். விண்ணப்பங்களின் விவரங்கள் விசாரணையின் பின்னர் பகிரப்படும்” என்று மானேஷிண்டே கூறினார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பான விசாரணையின் போது, போதைப்பொருள் பயன்பாடு குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, ரியா என்சிபியால் விசாரணை செய்யப்பட்டு இறுதியில் போதை மருந்து மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர், ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே நீதியின் பரிதாபம் என்று அழைத்தார்.
“மூன்று மத்திய விசாரணை அமைப்புகள் ஒரு பெண்ணை வேட்டையாடுகின்றன. சட்டவிரோத போதைப் பழக்கத்திற்கு அடிமையான, மும்பையில் ஐந்து முன்னணி மனநல மருத்துவர்களின் பராமரிப்பில் பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவரின் காதலி தற்போது சிக்கவைக்கப்பட்டுள்ளார்.” என மானேஷிண்டே கூறினார்.
நடிகை கைது செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா மற்றும் அவரது வீட்டு உதவியாளர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர் என்சிபியால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ரியா பல முறை மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றால் வறுத்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.