ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்த நடிகர் சோனு சூட்…? போலி நிறுவனங்களிடம் இருந்து போலி கடன்.. திடுக்கிடும் தகவல்..!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 12:58 pm
sonu sood - updatenews360
Quick Share

பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.20 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகளால் இந்தியாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் சோனு சூட். ஏழை குடும்பத்தினருக்கான கல்வி உதவி, விவசாய குடும்பத்திற்கு உதவி என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரது உதவும் மனப்பான்மையை அறிந்த பொதுமக்கள், அவரது வீட்டை ஒரு அரசு அலுவலகம் போல நினைத்து, தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி நாள்தோறும் கொடுத்து வருகின்றனர். அதனைப் பெற்று வரும் நடிகர் சோனு சூட்டும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உதவும் மனம் கொண்ட அவரது செயல்களைப் பாராட்டி ஐக்கிய நாடுகளின் சபை கூட, சிறந்த மனிதநேயமிக்க விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், கடந்த 15ம் தேதி நடிகர் சோனு சூட் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், சோனு சூட் போலியான நிறுவனங்களிடமிருந்து போலியாக கடன் வாங்கி, கணக்கில் வராத சொத்தை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

தாராளமாக உதவிகளை செய்து வரும் ரியல் ஹீரோ சோனு சூட், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வெளியாகி வரும் தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 219

0

0