‘ஆப்கனில் இருந்து ஐஎஸ்ஐ வெளியேற வேண்டும்’…மக்கள் முழக்கம்: டெல்லியில் தலிபான்கள், பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்!!

Author: Aarthi
14 September 2021, 7:56 pm
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஆப்கன் அகதிகள் தலிபான்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதையடுத்து ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். மேலும், ஆப்கன் மக்களை பல்வேறு வகைகளில் தலிபான்கள் துன்புறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தலிபான்களின் ஆட்சிக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, பிற நாடுகளில் வாழும் ஆப்கன் மக்கள் தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை கையிலெடுத்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ஜானக்கியாபுரம் காவல் நிலையம் அருகே ஆப்கன் மக்கள் தலிபான்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ”தீவிரவாதமும், பாகிஸ்தானும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்”, ”ஆப்கனில் இருந்து ஐஎஸ்ஐ வெளியேற வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய ஆப்கன் அகதிகள் கூறியதாவது, எனது உறவினர்கள் பஞ்ஷிரில் வசித்து வந்தனர். அவர்களை பாகிஸ்தான் விமானப்படையினர் கொன்றுவிட்டனர். அதனால்தான் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஐஎஸ்ஐ எங்கள் நாட்டிற்குள் ஊடுருவி உள்ளனர். ஆப்கனை கைப்பற்ற அந்த அமைப்பின் தலைவர் எங்கள் நாட்டிற்குள் சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 184

0

0