சொன்னதை செய்த பிரதமர் மோடி… முதல் நாளிலேயே வேளாண் சட்டம் வாபஸ் : குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றம்..!!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 1:06 pm
pm modi - updatenews360
Quick Share

டெல்லி : விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்த வேளாண் சட்டம் ரத்து மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதனால், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப் போவதாகவும், இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் ரத்து மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. எதிர்கட்சிகளின் கடும் அமளியால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் கூடியதும், மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா ஒரு மனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட இருக்கிறது. பிரதமர் மோடி, சொன்னதை போலவே, முதல் நாளிலேயே வேளாண் சட்டம் ரத்து செய்யப்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 251

0

0