தடையை மீறி மசூதிக்குச் சென்ற ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்பி..! வழியிலேயே கைது செய்தது மகாராஷ்டிரா காவல்துறை..!
2 September 2020, 6:39 pmகொரோனா வைரஸ் தொற்றுநோயால் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மீறி, பிரார்த்தனை செய்ய ஒரு மசூதிக்கு செல்லும் வழியில் மகாராஷ்டிரா போலீசார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீலை இன்று கைது செய்தனர்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக மஹாராஷ்டிராவில் கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா அரசு அனைத்து மத இடங்களையும் திறக்கத் தவறினால் ஒரு மசூதியில் பிரார்த்தனை செய்வதாக கடந்த வாரம், உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் மாநில பிரிவு தலைவருமான ஜலீல் தெரிவித்திருந்தார்.
ஜலீல் தடுத்து வைக்கப்பட்டபோது ஷாகஞ்ச் மசூதிக்கு சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அனைத்து மத இடங்களையும் திறக்க மாநில அரசு முடிவு செய்யாவிட்டால் மகாராஷ்டிரா முழுவதும் இதேபோன்ற போராட்டங்கள் நடக்கும் என்று ஜலீல் கூறினார். போலீஸ் கமிஷனர் சிரஞ்சீவ் பிரசாத் கூறுகையில், ஜலீல் தனது அலுவலகத்தைச் சுற்றி தடுத்து வைக்கப்பட்டார்.
“மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை நாங்கள் ஜலீலுக்கு உணர்த்தியுள்ளோம். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மேலதிக நடவடிக்கைகளை எடுப்போம்” என்று பிரசாத் கூறினார்.
நேற்று, ஒளரங்காபாத்தில் சிவசேனா மற்றும் எய்ஐஎம்ஐஎம் தொண்டர்களிடையே ஒரு நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. ஜலீல் நன்கு அறியப்பட்ட கட்கேஷ்வர் கோவிலுக்குச் சென்று, கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஒரு மெமோராண்டம் ஒப்படைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஜலீல் அங்கு செல்லவில்லை. ஆனாலும், சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை பல துறைகளில் தளர்த்தியுள்ளதால், அது வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் ஜலீல் தெரிவித்தார்.
“நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் காத்திருப்போம். அரசாங்கத்தால் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாவிட்டால், நாங்கள் மீண்டும் கோவிலுக்கு செல்வோம்” என்று அவர் எச்சரித்திருந்தார்.
சிவசேனா தலைவர் சந்திரகாந்த் கைர், “எங்கள் கோயில்களை திறக்க எங்களுக்கு ஏஐஎம்ஐஎம் உதவி தேவையில்லை. அரசாங்கம் உத்தரவுகளை பிறப்பித்த பிறகு நாங்கள் அதை செய்வோம். ஜலீல் வந்தால், அவர் மீண்டும் எங்களை இங்கே பார்க்க வேண்டி வரும்” என்று கூறினார்.
இதற்கிடையில், வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை என்று சிரஞ்சீவ் பிரசாத் நேற்று உறுதியாக தெரிவித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
0
0