தரையிறங்குவதற்கு முன் யு-டர்ன் அடித்த விமானம்..! கோழிக்கோடு விமான விபத்தின் பரபரப்பு பின்னணி..!
8 August 2020, 10:39 amநேற்று இரவு நடந்த கோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னதாக, விமானிகள் விமானத்தை தரையிறக்கு முயற்சித்து தோல்வியடைந்து பின்னர் மீண்டும் தரையிறங்கியது தெரிய வந்துள்ளது.
வந்தே பாரத் மிஷனின் கீழ், 184 பயணிகளுடன் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 7.41 மணியளவில், விமானத்தை கோழிக்கோட்டில் தரையிறக்கிய போது விபத்திற்குள்ளானது.
இதில் தற்போது வரை இரண்டு விமானிகள் உட்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே விமான விபத்து குறித்த பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் படி, விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் மழை மற்றும் மோசமான ஓடுபாதை தான் என கூறப்படுகிறது.
அதிகளவு பெய்த மலை காரணமாக விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருந்துள்ளது. மேலும் விமான ஓடுபாதையில் நீளமும் 2800 மீட்டர் மட்டுமே இருந்துள்ளது. இதனால் தான் ஓடுபாதை 10’இல் விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் வழுக்கிச் சென்ற விமானத்தை விமானிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் தான் விமானம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் மற்றொரு அதிரிச்சியளிக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. விமானம் ஓடுபாதை 10’இல் தரையிறங்குவதற்கு முன்பு, ஓடுபாதை 28’இல் விமானத்தை தரையிறக்க விமானிகள் முயன்றுள்ளனர். ஆனால் விமான கட்டுப்பாட்டு நிலையில், மோசமான வானிலை காரணமாக திரும்பப் போகச் சொல்லியுள்ளனர்.
இதனால் தான் விமானம் மீண்டும் யு-டர்ன் அடித்து திரும்பச் சென்று பின்னர் மீண்டும் ஓடுபாதை 10’இல் தரையிறங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கிடையே மோசமான வானிலை இருப்பதால், விமானத்தை வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது எனவும் கூறப்படுகிறது.