குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க சதித் திட்டம்..! பாதுகாப்பை பலப்படுத்தும் டெல்லி காவல்துறை..!

17 January 2021, 7:06 pm
Republic_Day_Parade_UpdateNews360
Quick Share

ஜனவரி 26’ம் தேதி இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினருடன் இணைந்து டெல்லி காவல்துறையும் பாதுகாப்பை அதிகரித்து வருகிறது.

“காலிஸ்தானிய அமைப்புகள் மற்றும் அல்கொய்தா உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகள் ஜனவரி 26 அன்று ஏதேனும் அசம்பாவித நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என்று எங்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதை மனதில் வைத்து, தேடப்படும் பயங்கரவாதிகளின் சுவரொட்டிகளை வைப்பது உட்பட சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.” என்று டெல்லி போலீஸ் அதிகாரி சித்தார்த் ஜெயின் தெரிவித்தார்.

“கொரோனா காரணமாக, முந்தைய 1.5 லட்சத்துடன் ஒப்பிடும்போது குடியரசு தின பார்வையாளர்களின் கூட்டத்தை 25,000 ஆக குறைக்க முயற்சிக்கிறோம். இதில் பங்கேற்கும் மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நாங்கள் 15 வயதுக்குக் குறைவான குழந்தைகளையும் 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களையும் இதில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளோம்.” என்று ஜெயின் கூறினார் .

குடியரசு தினத்திற்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த டெல்லி காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தியது.

கூட்டத்தின் முக்கிய நோக்கம், தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் விவசாயிகளின் போராட்டத்தால் எழும் சூழ்நிலையின் பின்னணியில் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான உள்ளீடுகளைப் பகிர்ந்து கொள்வதாகும்.

இதற்கிடையில், குடியரசு தின அணிவகுப்பின் ஒத்திகைகளை சீராக நடத்துவதற்கு வசதியாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து டெல்லி போக்குவரத்து காவல்துறை நேற்று ஒரு ஆலோசனையை வெளியிட்டது.

குடியரசு தின அணிவகுப்பின் ஒத்திகை ஜனவரி 17, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விஜய் சவுக் முதல் சி ஹெக்சகன் வரை, இந்தியா கேட் மற்றும் ராஜபாதையில் உள்ளிட்ட பகுதிகளை கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0