அடிக்கல் நாட்டிற்கு தயார் நிலையில் அயோத்தி..! ராமர் கோவில் கடந்து வந்த பாதை..!

4 August 2020, 3:26 pm
Ram_Temple_Update
Quick Share

பாரதப் பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு, அயோத்தி நகரம் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டுள்ளது. 

பகவான் ஸ்ரீ ராமர் பிறந்து நல்லாட்சி செய்த நகரமான அயோத்தியில் அவருக்கு மீண்டும் கட்டியெழுப்பப்படும் கோவிலின் முழுத் தகவல்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

அயோத்தியில் உள்ள இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 1959’இல் நிர்மோகி அகரா எனும் இந்து சமய அமைப்பால் தொடரப்பட்ட வழக்கு, பல காலம் நீடித்து வந்த நிலையில், கடந்த 2019, நவம்பர் 9’ம் தேதி நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க, மத்திய அரசின் மேற்பார்வையில், ஸ்ரீ ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கி கோவில் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ராமர் கோவில் வடிவமைப்பு :
இந்திய கட்டிடக் கலையான “நகர்” கட்டிடகக்கலை அடிப்படையில் 5 குவி மாடங்களுடன் 161 அடி உயரத்தில் கம்பீரமாக காட்டப்படுகிறது. ராமர் கோவிலைச் சுற்றி ஐந்து சிறிய கோவில்களும் கட்டப்படுகிறது. 

மேலும் கோவிலின் கட்டுமானத்திற்கு தேவையான கற்கள் அனைத்தும் ராஜதானின் பன்சி மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும். கோவில் தரை தளத்திற்கு மட்டும் “ஸ்ரீ ராம்” பாத்தித்த இரண்டு லட்சம் செங்கற்கள் பாதிக்கப்பட உள்ளது.

கோவிலைக் கட்டி முடிக்க மூன்றரை வருட காலம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கான ஒட்டுமொத்த செலவு 300 கோடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பூமி பூஜைக்கான நாள் குறிப்பு :
கர்நாடகாவின் பெலகாவியைச் சேர்ந்த ஜோதிடர் விஜயேந்திர ஷர்மாவிடம் பூமி பூஜைக்கு நாள் குறிக்க, ராம் ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த பிப்ரவரியில் கேட்டிருந்தது. இதையடுத்து ஜோதிடர் சர்மா, ஏப்ரல் மாதம் அக்ஷய திரிதியை அன்று பூமி பூஜைக்கு நாள் குறித்தார். 

ஆனால் கொரோனா காரணமாக பூமி பூஜையை அப்போது நடத்த முடியாமல் போனது. இதையடுத்து ஜூலை 29, ஜூலை 31, ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளை முன்மொழிந்தார்.

இதற்கிடையே பூமி பூஜையில் பிரதமர் கலந்து கொள்வதை முன்னிட்டு, அவருக்கு ஏற்றார் போல், ஆகஸ்ட் 5’ம் தேதி பூமி பூஜைக்காக நாள் குறிக்கப்பட்டது.

பூமி பூஜைக்கான அழைப்பிதழ் :
ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடக்கும் சமயத்தில் மேடையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீ ராம்ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகிய 5 நபர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

பூமி பூஜைக்கான முதல் அழைப்பு ராம் ஜென்மபூமி விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த நடத்திய இக்பால் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள இக்பால் அன்சாரி, “இது கடவுள் ராமரின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பூமி பூஜையை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக விழாவில் கலந்து கொள்ள 150 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கான அழைப்பிதழ் இருப்பவர்கள் மட்டுமே விழாவில் நேரடியாக கலந்து கொள்ள  மற்றவர்கள் இணையம் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

பூமி பூஜை :
நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை பூமி பூஜையை நடத்துவதற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை முதலே வேத முழக்கங்களுடன் பூமி பூஜைக்கான பணிகள் தொடங்கிவிடும். பிரதமர் நரேந்திர மோடி காலை ராமர் கோவிலுக்கு வரும் முன் ஹனுமான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்.

பின்னர் ராமர் கோவில் பூமி பூஜையில் மோடி கலந்து கொண்டு, சரியாக 12.15 மணிக்கு  ராமர் கோவிலுக்கான 40 கிலோ வெள்ளியாலான அடிக்கல்லை பிரதிஷடை செய்வார். மதியம் 12.15 மணியில் அபிஜித் முகூர்த்தம் வருவதால் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டலை அந்த நேரத்தில் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பூமி பூஜை முடிந்த பின், ஸ்ரீ ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய பின் அவர் மீண்டும் டெல்லிக்கு திரும்புவார்.

நேரடி ஒளிபரப்பு :
கொரோனா சமயம் என்பதால் பூமி பூஜைக்கு மக்கள் வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளதை அடுத்து, பூமி பூஜையை மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பார்க்கும் வகையில், மத்திய அரசின் ஊடகமான தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்தே கண்டுகளிக்கலாம்.