லடாக் எல்லையில் சீறிப் பாய்ந்த ரஃபேல் போர் விமானங்கள்..! இந்திய விமானப்படை அதிரடி..!

21 September 2020, 12:28 pm
rafale_updatenews360
Quick Share

கிழக்கு லடாக் பிரதேசத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ந்து நிலவும் மோதலுக்கு மத்தியில் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) புதிய ரஃபேல் போர் விமானங்கள் லடாக் பிராந்தியத்தில் வானத்தில் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படை நீண்டகாலமாக எதிர்நோக்கியிருந்த ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதியாக ஐந்து விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தது.  

செப்டம்பர் 10’ஆம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக சேவையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஐந்து போர் விமானங்கள் ஏற்கனவே சில நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

அம்பாலாவில் உள்ள ஐ.ஏ.எஃப் தளத்தில் விமானங்களின் அதிகாரப்பூர்வ இணைப்பின் போது, ​​விமானபடைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதோரியா, இந்த போர் விமானங்கள் இலக்குகளைக் குறி வைத்து துல்லியமாக தாக்கும் என்று கூறியிருந்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு ரஃபேல் போர் விமானங்களை இணைப்பதற்கு இதை விட சரியான நேரம் கிடையாது என்று ஐ.ஏ.எஃப் தலைவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், செப்டம்பர் 10’ஆம் தேதி ஜெட் விமானங்கள் சேவையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவை ஏற்கனவே ஜூலை 29 அன்று இந்தியா வந்தடைந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்போதிருந்து, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகள் உட்பட பல்வேறு நிலப்பரப்புகளில் ஜெட் விமானங்கள் பல பகல் மற்றும் இரவு நேரங்களில் பறக்கவிடப்பட்டது.