பிரதமர் மோடியை புகழ்ந்தால் பறிக்கப்படும் பிஎச்டி பட்டம்: நீதிமன்றத்தை நாடிய மாணவர்

Author: Udhayakumar Raman
1 December 2021, 11:13 pm
Quick Share

பிரதமர் மோடியை புகழ்ந்ததால் தனது பிஎச்டி பட்டத்தை பறிக்கப்படுவதாக மாணவர் கூறிய குற்றச்சாட்டுக்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் 200 வது ஆண்டு விழா கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நடைபெற்றது. இதில் இணையவழியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான டேனிஷ் ரகீம் என்பவரிடம் செய்தித் தொலைக்காட்சி ஒன்று நிகழ்ச்சி குறித்து பேட்டி எடுத்தது. அதில் ரகீம், பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். இது ஒளிபரப்பானதும், பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் டேனிஷ்ரகீமை அழைத்து, பிரதமர் மோடியை மீடியாவில் புகழ்ந்து பேசியது நமது பல்கலைக்கழகத்தின் கலச்சாரத்திற்கு எதிரானது. நீ புகழ்ந்து பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பலனை நீ அனுபவித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது 5 ஆண்டு பிஎச்டி ஆராய்ச்சிப்படிப்பை ரகீம் முடித்தார். அதற்காக அவருக்கு பிஎச்டி மொழியியல் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த பட்டத்தை திருப்பி அளிக்கும்படி டேனிஷ் ரகீமிற்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளதோடு, உபி உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் டேனிஷ் ரகீமின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முஸ்லீம் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,டேனிஷ் ரகீம் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவர் மொழியியல் துறையில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் மொழி படிப்பில் MA & PhD ஐப் படித்தார். இது மொழியியலில் PhD பட்டத்தையும் வழங்குகிறது. எல்ஏஎம்-ல் எம்ஏ படித்ததால், லேமில் பிஎச்டி பட்டம் பெற வேண்டும். நிர்வாக முடிவு அரசியலால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தவறுதலாக, அவருக்கு மொழியியலில் PhD பட்டம் வழங்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

Views: - 461

0

0