“சலோ அமலாபுரம்”..! பாஜக பேரணியை தடுத்த போலீஸ்..! 144 தடையுத்தரவு அமல்..!
18 September 2020, 12:55 pmபாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ்.விஷ்ணுவர்தன் ரெட்டி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் நகரில் அதிக பதற்றம் நிலவியது. ரெட்டி எங்கே சிறை வைக்கப்படுகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.
அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ஆறு தசாப்தங்களாக இருந்த பழமையான ஏழு அடுக்கு மர தேர் செப்டம்பர் 5 அன்று தீயில் சிக்கிய சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர்கள் ‘சலோ அமலாபுரம்’ பேரணியை நடத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் நேற்று இரவு மர்மமான சூழ்நிலையில் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னர், ரெட்டி தெலுங்கில் வெளியிட்ட ட்வீட்டில், “என்னை அமலாபுரத்தில் நள்ளிரவில் சட்டவிரோதமாக போலீசார் கைது செய்தனர். எனக்கு என்ன நடந்தது என்பதற்கு அரசாங்கமே பொறுப்பு.” எனத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இரவு 11 மணி முதல் பல காவல் நிலையங்களுக்கு பயணம் செய்கிறோம். இதுவரை நாங்கள் எங்கு செல்கிறோம் என்று காவல்துறை என்னிடம் சொல்லவில்லை. இரவு 11 மணி முதல் இப்போது வரை பல காவல் நிலையங்களில் காவல்துறையினர் ரோந்து சென்றுள்ளனர்.” என்று அவர் மேலும் கூறினார்.
ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு மீது குற்றம் சாட்டிய பாஜக பொதுச் செயலாளர், “மாநில அரசின் நோக்கமும் காவல்துறையின் நடத்தையும் எனக்கு புரியவில்லை” என்றார்.
இதற்கிடையில், கோயில் தேர் எரியும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அந்திரவேதத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் ஆந்திர மாநில பாஜக கோரியது.
இந்த சம்பவம் குறித்து தங்கள் கவலையை பதிவு செய்வதற்காக, ஆந்திர பாஜக இன்று ‘சலோ அமலாபுரம்’ திட்டத்தை திட்டமிட்டது. இருப்பினும், கட்சித் தலைவர் சோமு வீராஜு உட்பட பல பாஜக தலைவர்களை ஆந்திர காவல்துறை வீட்டுக் காவலில் வைத்தது.
இதையடுத்து அமலாபுரம் நகரத்தில் மட்டுமல்லாது முழு கொனசீமா பிராந்தியத்திலும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.சி.யின் பிரிவு 30 மற்றும் 144 கோனசீமா பிராந்தியத்தில் விதிக்கப்பட்டுள்ளன.
அமலாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த மாநிலக் கட்சியின் துணைத் தலைவர் ரவேலா கிஷோர் பாபுவையும் கிருஷ்ணா மாவட்டத்தின் அனுமன் சந்திப்பில் ஆந்திர காவல்துறை தடுத்து வைத்தது.
இதற்கிடையே டி.ஐ.ஜி மோகன் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சலோ திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு அறிக்கையில், அமலாபுரத்திற்கு செல்ல வேண்டாம் என்று ராவ் மக்களை வலியுறுத்தினார். சிஆர்பிசியின் பிரிவு 144 மற்றும் 30’ன் படி விதிகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
அமலாபுரம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு தடுப்புக் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்தே வருகிறது.