பெண்ணை சரமாரியாக தாக்கிய முதியவர்.! “சாமி“ பட பாணியில் பெண் துணிச்சல்.!!
10 August 2020, 5:38 pmஆந்திரா : நிலத்தகராறில் பெண்ணை பிடித்து சரமாரியாக தாக்கியதால் மருத்துவமனையில் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாரெல்ல பாப்பிரெட்டிப்பள்ளியை சேர்ந்த பெண் துளசிக்கு அதே ஊரில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. துளசிக்கு அவருடைய நிலத்தை சுற்றி நிலம் வைத்திருப்பவர்களுக்கும் இடையே நிலத்தின் எல்லை தொடர்பான தகராறு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை துளசி தன்னுடைய நிலத்தில் விவசாய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருடைய நிலத்திற்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் கும்பலாக வந்து துளசியை தாக்க முயன்றதாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் அந்த கும்பலை சேர்ந்த முதியவர் ஒருவர் துளசியின் முடியை பிடித்து இழுத்து அவருடைய வயிற்றில் குத்து விட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற முன்னதாகவே கருதிய துளசி தன்னுடன் எடுத்து வந்திருந்த மிளகாய் பொடியை அந்த முதியவர் மீது தூவி அவருடைய பிடியில் இருந்து தப்பினார். இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு சென்ற துளசி உறவினர்கள் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக பீலேர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்காக திருப்பதியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக துளசி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.