அனில் தேஷ்முக் விவகாரத்தால் முடங்கியது பாராளுமன்றம்..! மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வலியுறுத்தல்..!

Author: Sekar
22 March 2021, 1:18 pm
rajyasabha_updatenews360
Quick Share

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விவகாரம் விஸ்வரூபமடைந்ததை அடுத்து, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றம் இன்று முடக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணித் தலைவர்களின் முக்கிய கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி வலியுறுத்தி வரும் நிலையில், அனில் தேஷ்முக் பதவி விலகுமாறு கேட்கப்பட மாட்டார் என்று ஆளும் கூட்டணியின் தலைவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தாலும், இது தொடர்பான இறுதி முடிவு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் உள்ளது எனக் கூறப்படுகிறது.

மும்பை காவல்துறையின் உயர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்ட பரம் பிர் சிங், அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள நிறுவனங்களிடமிருந்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியதை அடுத்து, மகாராஷ்டிரா அரசியலில் ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்: சமீபத்திய அப்டேட்ஸ்

“ஒரு நபர் எதற்காக 16 வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்டார்? பின்னர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டு எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்? மாநிலத்தில் பாஜக அரசு இருந்தபோது, சச்சின் வேஸை மீண்டும் பணியில் அமர்த்துவதற்காக உத்தவ் தாக்கரே தானே தேவேந்திர ஃபட்னாவிஸை அழைத்திருந்தார். ஆனால் ஃபட்னாவிஸ் மறுத்துவிட்டார். தாக்கரே அரசு வந்ததும் அவர்கள் அவரை மீண்டும் பணியில் அமர்த்தினர்” என்று மக்களவையின் சுயேட்சை எம்பியான நவ்னீத் ரவி ராணா கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட தலைவர்களால் சபையில் அனில் தேஷ்முக் விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சமீபத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளை அவர்கள் எழுப்பினர்.

மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தான் உகந்தது என்று பாஜக எம்.பி. கிரிஷ் பாபாட் கூறினார்.

“ரூ 100 கோடி இலக்கு வழங்கப்பட்ட உதவி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது போன்ற நாட்டின் முதல் சம்பவம் இதுவாக இருக்கலாம். அவர் நாட்டின் சிறந்த காவல்துறை ஊழியர் சச்சின் வேஸ் என்று கூறுகிறார். இது எப்படி நடக்கும்?” என மக்களவையில் பாஜக எம்.பி. ராகேஷ் சிங் கூறினார்.

“இது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று என்.சி.பி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இறுதி முடிவு மகாராஷ்டிரா முதல்வரின் முடிவுதான். இருப்பினும், எம்.வி.ஏ உறுப்பினர்களின் முக்கிய குழு இன்று மாலை முதல்வரை சந்திக்கும். இந்த விஷயத்தில் இறுதி முடிவை முதல்வர் விரைவில் எடுப்பார்.” என மகாராஷ்டிரா காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளரான எச்.கே.பாட்டீல் கூறினார்.

“பரம் பிர் சிங்கின் கடிதம் குறித்து விவாதிக்க பாலாசாகேப் தோரத் மற்றும் அசோக் சவான் ஆகியோர் முதல்வரை சந்திக்கவுள்ளனர். என்சிபி தலைவர் ஏற்கனவே ஊடகங்களுடன் பேசினார். நாங்கள் ராஜினாமா பற்றியும் விவாதிப்போம் என்று கூறினார். என்ன மாற்று வழிகள் வந்தாலும் அது குறித்து விவாதிப்போம். ராஜினாமா செய்வது கூட ஒரு மாற்றுதான்” என்று அவர் கூறினார்.

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் உள்துறையின் காவல் துறை அலுவலகத்தை அடைந்துள்ளார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டு துறையின் டிஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஜெய் ஜீத் சிங்குடன் சந்திப்பு நடத்தினார்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளுக்கு எதிராக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், என்.சி.பி தலைவர் சரத் பவாரின் நிலைப்பாட்டை ஆதரித்து, குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

“கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க வேண்டும். முதல்வர் அதை விசாரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறினார். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று என்.சி.பி தலைவரும் கூறினார். இதை விசாரிக்கும் சவாலை ஏற்க அரசு தயாராக இருந்தால், ஏன் ராஜினாமா பிரச்சினை மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது?” என சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பினார்.

மத்திய ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த யாராவது முயன்றால், அது அவர்களுக்கே வினையாக முடியும் என சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்தார்.

ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை : மகாராஷ்டிர அமைச்சர்

இதற்கிடையில், மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், பரம் பிர் சிங்கின் கடிதம் இடமாற்றத்திற்குப் பிறகு எழுதப்பட்டது ஏன் என்ற கேள்விகளை எழுப்புகிறது என்று கூறினார். “உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்கிற்கு எதிராக ஒரு விசாரணை இருக்கும். கடிதத்தின் அடிப்படையில் ராஜினாமா கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடக்காது. விசாரணைக்குப் பிறகுதான் கட்சி அது குறித்து முடிவெடுக்கும்.” என்று அவர் கூறினார்.

தேஷ்முக் தரப்பின் பதிலும் கேட்கப்பட வேண்டியது அவசியம் என்று சரத் பவார் தெரிவித்தார். “அனில் தேஷ்முக் தரப்பும் அவர் குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன் கேட்கப்பட வேண்டும். தேஷ்முக் குறித்து நாளைக்குள் ஒரு முடிவை எடுப்போம்” என்று சரத் பவார் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் என்.சி.பி தலைவர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சரத் பவாரை சஞ்சய் ராவத்தும் சந்தித்து விவாதித்தார்.

பரம் பிர் சிங்கின் குற்றச்சாட்டு என்ன?

மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட பரம் பிர் சிங், தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வர் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், தேஷ்முக் மிரட்டி பணம் பறிக்கும் மோசடியை நடத்தி வருவதாகவும், மும்பை காவல்துறை அதிகாரிகளுக்கு மாதத்திற்கு ரூ 100 கோடியை வசூலிக்க டார்கெட் கொடுத்ததாகவும், அதில் பாதிக்கு மேல் மெகாபோலிஸில் உள்ள 1,750 உணவகங்கள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து வந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த மாதம் அன்டிலியாவுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த எஸ்யூவியின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையில் பரம் பிர் சிங் மகாராஷ்டிரா அரசாங்கத்தால் மாற்றப்பட்டார். வாகனத்தில் இருந்து கிட்டத்தட்ட 2.5 கிலோ ஜெலட்டின் வெடிபொருளை போலீசார் மீட்டனர். பின்னர், இடைநீக்கம் செய்யப்பட்ட மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வேஸ் மற்றும் ஹிரான் இடையே உள்ள தொடர்பை என்ஐஏ வெளிப்படுத்தியதை அடுத்து இந்த வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

தேஷ்முக் ராஜினாமா செய்ய பாஜக வலியுறுத்தல் :

அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனில் தேஷ்முக் ராஜினாமா எய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகள் வெளிவந்த உடனேயே, தேஷ்முக் ராஜினாமா செய்ய பாஜக கோரியது. “மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரால் மட்டுமே ₹ 100 கோடி இலக்கு என்றால், மற்ற அமைச்சர்களின் இலக்கு என்ன?” என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வியெழுப்பியுள்ளார்.

“குற்றச்சாட்டுகள் மூலம் தற்போது ஒவ்வொரு ஊழலாக வெளிவருகின்றன. சம்பந்தப்பட்ட அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Views: - 167

0

0