திருப்பதியில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்

21 November 2020, 10:19 pm
Quick Share

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் இன்று புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15ம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்த புஷ்பயாகம், காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல், புஷ்ப யாகம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு வருடத்தில் வரும் கார்த்திகை மாத சிராவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

அதன்படி, பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து, ஏழு டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக தோட்டத்துறை இயக்குனர் சீனிவாசுலு தலைமையில் கொண்டு வரப்பட்டு கோயில் முன்பு தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபம் என அழைக்கப்படும் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து வேத பண்டிதர்கள் சதுர்வேத பாராயணம் படிக்க சர்வ பூபால வாகனத்தில் கொலு வைக்கப் பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சாமந்தி, மல்லி, முல்லை,தாழம்பூ ரோஜா உள்ளிட்ட 14 வகையான மலர்கள் மற்றும் துளசி, மருவம், வில்வம் போன்ற இலைகளை கொண்டும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. புஷ்ப யாகத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று நடை பெற வேண்டிய கல்யாண உற்சவம், டோல் உற்சவம், கட்டண பிரம்மோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி கோபிநாத், துணை நிர்வாக அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Views: - 20

0

0