“தவறை நீங்கள் செய்துவிட்டு பழியை கடவுள் மீது போடுவதா”..? ப.சிதம்பரம் கேள்வி..!

2 September 2020, 9:44 am
Quick Share

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவுக்கு கடவுள் மீது பழியை போட வேண்டாம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பை கடவுளின் செயல் என்று குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி. வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு முன் எப்போதும் இல்லாத அபூர்வமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வேளாண் துறையைத் தவிர மற்ற அனைத்து துறைகளும் வெகு மோசமான சரிவைச் சந்தித்து இருப்பதாக புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மனிதன் உருவாக்கிய பேரழிவுக்குக் கடவுளின் மீது பழி போடா வேண்டாம் எனவும், மத்திய அரசின் நிவாரண திட்டம் ஒரு நகைச்சுவை எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், நம் நாட்டின் விவசாயிகளை ஆசீர்வதித்ததற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் என அறிவுறுத்திய ப.சிதம்பரம், இயற்கை பேரழிவையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவையும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 9

0

0