செங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்..! சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..!

28 February 2021, 9:48 pm
kejriwal_updatenews360
Quick Share

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மீரட்டில் நடந்த கிசான் மகாபஞ்சாயத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், விவசாயிகள் ஒரு டிராக்டர் அணிவகுப்பை மேற்கொண்ட நாளில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்குத் தெரியும் என்றார்.

“செங்கோட்டை வன்முறையின் பின்னணியில் மத்திய அரசு தான் உள்ளது, விவசாயிகள் அல்ல. மத்திய அரசு டெல்லி சாலைகள் குறித்து தெரியாத விவசாயிகளை தவறாக வழிநடத்தியது” என்று அவர் கூறினார்.

“எங்கள் நாட்டின் விவசாயிகள் மகிழ்ச்சியற்றவர்கள். 90 நாட்களுக்கு மேலாக அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் டெல்லி அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மூன்று மாதங்களில் 250’க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை.” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கூட செய்யப்படாத அட்டூழியங்களை எதிர்கொண்டதாக கெஜ்ரிவால் கூறினார்.

“பிரிட்டிஷார் கூட எங்கள் விவசாயிகளை இந்த அளவுக்கு ஒடுக்கவில்லை, அவர்கள் சாலையில் கம்பிகளை ஊன்றவில்லை. இந்த அரசாங்கம் பிரிட்டிஷாரை விட ஒருபடி  மேலே சென்றுவிட்டது.

இன்று, பாரதிய ஜனதாவின் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக தேச விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக வழக்குகள் பதிவு செய்துள்ளன. பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்த தைரியம் இல்லை. அவர்கள் எங்கள் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.

Views: - 6

0

0