கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பு…! முதலமைச்சர் உறுதி

15 August 2020, 7:56 pm
School_Students_UpdateNews360
Quick Share

டெல்லி: டெல்லியில் கொரோனா தாக்கம் குறையும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 74வது சுதந்திரதினம் தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: 2 மாதங்களோடு ஒப்பிட்டால், தற்போது, டெல்லியில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் வீட்டுக்குச் சென்ற பின்னர் அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்னை இருப்பதாக அறிகிறேன். ஆகையால் அடுத்த வாரம் முதல் அவர்களுக்கு ஆக்சிஜன் தரும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.

எங்களை பொறுத்தவரை பள்ளிக் குழந்தைகளின் உடல்நலன் மிகவும் முக்கியம். என்னிடம் பலரும் பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

நான் அவர்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். டெல்லியில் கொரோனா  குறையும் வரை பள்ளிகள் திறப்பு இல்லை. டெல்லி மக்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும்.

டெல்லியில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. பொருளாதாரத்தை வலுப்படுத்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பேசினார்.