ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆப்பு..? ஐக்கிய ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணியைக் கையிலெடுக்கும் ஒவைசி..!

20 September 2020, 11:05 am
owaisi_updatenews360
Quick Share

பீகார் தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவின் கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஒரு தனி பாஜக எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியுள்ளார். அதன்பிறகு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) அவரை “வாக்குகளை கெடுப்பவர்” என்று அழைத்தது.

ஆர்ஜேடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஓவைசி, மதச்சார்பற்ற வாக்குகளை கெடுப்பவர் என்று அழைத்ததற்காக ஆர்ஜேடியைத் தாக்கினார். “பீகாரில் 2019 பொதுத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பெறுபவர்களுக்கு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் எனக் கூறியுள்ளார்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒவைசி, “யுடிஎஸ்ஏ’க்கு (ஐக்கிய ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணி) அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் எத்தனை வேட்பாளர்களை போட்டியிடச் செய்ய வேண்டும் என முடிவெடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடியின் தோல்வி :

பீகாரில் நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி யின் செயல்திறன் மிக மோசமாக இருந்தது. 

கடந்த பொதுத் தேர்தலில், பீகாரில் மொத்தம் 40 மக்களவை இடங்களில் 39 இடங்களை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. கிசங்கஞ்சின் ஒரு இடத்தை காங்கிரஸ் வென்றது. ஆர்ஜேடிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் முஸ்லீம் ஆதிக்கம் கொண்ட கிசங்கஞ்ச் தொகுதியில் ஒரு சட்டசபை இடத்தை வென்ற பின்னர், பீகார் அரசியலில் தனது தடத்தை அதிகரிக்க ஏஐஎம்ஐஎம் முயற்சிக்கிறது. மேலும் இந்த முறை சீமாஞ்சல் பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் சில இடங்களை போட்டியிட தேர்ந்தெடுத்து மாநிலத்தில் தனது வரம்பை அதிகரிக்க முயற்சிக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக ஐக்கிய ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணி?

பீகாரில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேவேந்திர பிரசாத் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா தளத்துடன் ஒவைசி கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த கூட்டணியின் மூலம் பாஜக வெல்வதற்கு ஒவைசி உதவுவதாக பீகார் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் ஒவைசி, பீகாரில் மதச்சார்பின்மை எனப் பேசும் அரசியல்வாதிகள் பழைய பல்லவியையே திரும்ப திரும்ப பாடுகிறார்கள் என விமர்சித்துள்ளார்.

பீகாரில் முன்னர் செல்வாக்கோடு இருந்த லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லாத நிலையில், கட்சியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. மேலும் அவர்களின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நிலைமை இன்னும் படு மோசம்.

இந்நிலையில், பீகார் அரசியலில் காங்கிரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வீழ்த்தி அவர்களின் இடத்தை ஒவைசி, தனது ஐக்கிய ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணியின் மூலம் நிரப்ப முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த முயற்சி வெற்றி பெற்றால், இதே பார்முலாவை சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றி நாடு தழுவிய அளவில் காங்கிரசின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சி செய்யும் எண்ணத்தில் ஒவைசி இருப்பதாகக் கூறப்படுகிறது.