குட்டிகளை பிடிக்க முயன்ற வேட்டைக்காரர்கள்! தாய் சிங்கம் சும்மா விடுமா?

6 February 2021, 9:05 am
Quick Share

தனது குட்டிகளை வலை வைத்து பிடிக்க முயன்ற வேட்டைக்காரர்களை, தாய் சிங்கம் தாக்கிய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேட்டைக்காரர்களை, வனத்துறையினர் கைது செய்துள்ளனர். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. அதுவே சிங்கம்னா சும்மா விடுமா?

ஆசிய சிங்கங்கள், இந்தியாவில் குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. அரிய உயிரினமாக மாறி வரும் இந்த சிங்கங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேட்டைக்காரர்கள் சிலர், கிர் வனப்பகுதியில், சிங்கக்குட்டிகளை வலை வைத்து பிடிக்க முயற்சி செய்து, பெண் சிங்கத்தால் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தில் தங்காத் பகுதியை சேர்ந்தவர் ஹபீப் சம்ஷர் பர்மர்(வயது 40). இவர் தனது மூன்று கூட்டாளிகளுடன் இணைந்து, வேட்டைக்கு கிளம்பி இருக்கிறார். ‘கிர்’ வனப்பகுதியில் உள்ள கம்பா என்ற கிராமத்தில், குட்டிகளுடன் பெண் சிங்கம் இருப்பதை கண்டு குட்டிகளை வலை வைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர். வலையில் சிங்க குட்டி ஒன்று சிக்கி கொள்ள, தாய் சிங்கம், வேட்டைகாரர்களை தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்கள் அந்த வேட்டைக்காரர்கள்.

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற வேட்டைக்காரர்கள் மீது சந்தேகம் கொண்ட டாக்டர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், பர்மரும் அவரது கூட்டாளிகளும் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசாரின் உதவியுடன் அவர்களை கைது செய்திருக்கின்றனர். வேட்டைக்காரர்கள் சிங்கத்தை பிடிக்க வலை விரித்திருந்தனரா அல்லது சிறு விலங்குகளை பிடிக்க வலை விரித்திருந்தனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 0

0

0