யார் அடுத்த முதல்வர்..? டெல்லிக்கு விரைந்துள்ள அசாம் பாஜக தலைவர்கள்..! இன்று முடிவு வெளியாகுமா..?

8 May 2021, 1:15 pm
assam_health_minister_updatenews360
Quick Share

அசாமின் அடுத்த முதல்வர் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்தார்.

அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இருவரும் பாஜக மத்திய தலைமையால் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டனர். அடுத்த அரசாங்கத்தின் தலைமை பிரச்சினை குறித்து விவாதிக்க அவர்கள் டெல்லி சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அசாமில் இருந்து இரு தலைவர்களும் இன்று காலை டெல்லியை அடைந்த போதிலும், சர்மா தான் நட்டாவை சந்திக்க அவரது இல்லத்தை முதலில் அடைந்தார். அங்கு பாஜகவின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷும் உடன் இருந்துள்ளார்.

பின்னர் அவர்களுடன் அமித் ஷாவும் இணைந்தார். பாஜகவின் உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்க சோனாவாலும் நட்டாவின் இல்லத்திற்கு விரைவில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அசாமின் அடுத்த முதல்வர் குறித்து முடிவெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அசாமின் பூர்வீக சோனோவால்-கச்சாரி பழங்குடியினரைச் சேர்ந்த சோனோவால் மற்றும் வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் கன்வீனர் சர்மா இருவரும் அசாமில் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

அசாமில் சர்பானந்த் சோனோவால் முதல்வராக இருந்தாலும், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பதால் அப்போதிருந்தே குழப்பம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அமித் ஷா மற்றும் நட்டா முன்னிலையில், யார் அடுத்த முதல்வர் என்பது தீர்மானிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 192

0

0