அசாமின் ஒரே பெண் முதல்வர் உடல்நலக் குறைவால் மறைவு..! பிரதமர் மோடி இரங்கல்..!

28 September 2020, 11:29 pm
Syeda_Anwara_Taimur_UpdateNews360
Quick Share

அசாமின் ஒரே பெண் முதல்வரான சையதா அன்வரா தைமூர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இன்று இறந்தார். அவருக்கு வயது 84.

1980 டிசம்பர் 6 முதல் 1981 ஜூன் 30 வரை முதல்வராக இருந்த தைமூர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக குவஹாத்தியில் உள்ள குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலில் சேருவதற்கு முன்பு ஜோர்ஹாட்டில் உள்ள டெபிச்சாரன் பாருவா பெண்கள் கல்லூரியில் பொருளாதாரம் ஆசிரியராக இருந்த இவர், நான்கு தசாப்தங்களாக நீடித்த ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற்றார்.

1972, 1978, 1983 மற்றும் 1991 ஆகிய நான்கு முறை அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், காங்கிரசின் வேட்பாளராக, 1983 முதல் 1985 வரை மாநில பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1988’ஆம் ஆண்டில், அவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2011 இல், காங்கிரஸை விட்டு அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சேர்ந்தார். 2018’ஆம் ஆண்டில் என்.ஆர்.சி பட்டியலில் இருந்து அவரது பெயர் காணாமல் போனதை அடுத்து அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பிலிருந்தும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சையதா அன்வரா தைமூரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அஸ்ஸாம் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்புகள் என்றும் நினைவு கூறப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் வெளியிட்டுள்ள ஒரு இரங்கல் ட்வீட்டில், “அசாமின் முன்னாள் முதல்வர் சையதா அன்வாரா தைமூரின் திடீர் மறைவால் வருத்தமடைந்துள்ளேன். அவரின் ஆன்மா சாந்தியடைந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 1

0

0