தவறான தகவல்களை பரப்பி இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி : பிரதமர் மோடி குற்றச்சாட்டு…

Author: kavin kumar
20 January 2022, 6:44 pm
Quick Share

டெல்லி: தவறான தகவல்களை பரப்பி வெளிநாடுகளில், இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவில் இருந்து பொன் இந்தியாவை நோக்கி எனும் தேசிய விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதேபோல பிரம்ம குமாரிகளின் 7 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். கிராமி விருது பெற்ற ரிக்கிகேஜ் 75-வது ஆண்டு பெருவிழாவிற்கு அர்ப்பணித்த பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:- இன்று நாம் பாகுபாடுகளுக்கு இடமில்லாத ஒரு அமைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அடித்தளத்திற்கு உறுதியாக இருக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி உள்ளோம். சிந்தனை, புதுமையான அணுகுமுறை முற்போக்கான முடிவுகள் கொண்ட இந்தியா உருவாவதை நாம் காண்கிறோம்.

நமது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளது. தேசம் நம்மிடம் இருக்கிறது. தேசத்தில் நாம் இருக்கிறோம். இந்த உணர்வுதான் புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்தியர்களின் மிகப்பெரிய பலமாக உள்ளது. நமது ஆன்மிகம், பன்முகதன்மை ஆகியவை பாதுகாக்கப்பட தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு,கல்வி, சுகாதாரம் ஆகியவை தொடர்ந்து நவீனமயமாக்கப்பட வேண்டும்.கடந்த 75 ஆண்டுகளில் உரிமைகள், உரிமைகளுக்காக போராடுவது, நேரத்தை வீணடிப்பது என்ற மட்டும் பேசினோம். ஒருவரின் கடமைகளை முழுவதுமாக மறப்பது இந்தியாவை பலவீனமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. தவறான தகவல்களை பரப்பி, வெளிநாடுகளில் இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. இதனை வெறும் அரசியல் என ஒதுக்கிவிட்டு செல்ல முடியாது. இது அரசியல் அல்ல. இது நமது நாட்டின் கேள்வி. இந்தியாவை முழுமையாக உலக நாடுகள் தெரிந்து கொள்ள வைத்திருப்பது நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 323

0

0