அவார்ட் வாங்கிய சைலஜாவுக்கு நோ..! மருமகனுக்கு அமைச்சர் பதவி..! சர்ச்சையை ஏற்படுத்திய பினராயி விஜயன் அமைச்சரவை பட்டியல்..!

18 May 2021, 10:23 pm
Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

கேரளாவில் இரண்டாவது முறையாக முதல்வராக மே 20 ஆம் தேதி பதவியேற்கும் பினராயி விஜயன் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அமைச்சரவையில் இடம் பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கடந்த முறை அமைச்சரவையில் இடம் பெற்றவர்களில் யாருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

மிக சிறப்பாக கொரோனாவைக் கையாண்ட சுகாதார அமைச்சர் என ஐநா விருது வென்ற ஷைலஜாவுக்கு கூட இடம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தனது மருமகனுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கியுள்ளார். புதிய அமைச்சரவை மே 20 அன்று பதவியேற்கவுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழு இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, எம்.பி. ராஜேஷ் சபாநாயகர் வேட்பாளராகவும், ஷைலாஜா கட்சியின் கொறடா ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் கட்சியின் செயலாளராக டி.பி.ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

பினராயி விஜயன் சட்டசபையில் கட்சித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைச்சர்களின் பட்டியலில் இப்போது எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பலகோபால், பி ராஜீவ், வி.என்.வாசவன், சஜி செரியன், வி சிவன்குட்டி, முகமது ரியாஸ், டாக்டர் ஆர் பிந்து, வீணா ஜார்ஜ் மற்றும் வி அப்துல் ரஹ்மான் ஆகியோர் அடங்குவர். 

இதில் முகமது ரியாஸ் முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உலக சுகாதார அமைப்பிடம் விருது வாங்கிய சைலஜாவுக்கு இடம் வழங்காமல், தனது மருமகனுக்கு இடம் வழங்கியது கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், கொரோனாவை சிறப்பாக கையாண்ட சைலஜாவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமித்திருக்கலாம் என கட்சிக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மொத்தமுள்ள 21 அமைச்சா்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சா்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சா்களும், கேரள காங்கிரஸ் (எம்), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சா் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி 21 அமைச்சா்களுக்கு மேல் அமைச்சரவையில் இடம் வழங்க முடியாது என்பதால் தலா ஒரு எம்எல்ஏக்களைக் கொண்ட நான்கு கூட்டணி கட்சிகளுக்கு சுழற்சி முறையில் அமைச்சா் பதவி வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 158

0

0