களைகட்டும் அயோத்தி : பூமி பூஜைக்கு அரசியல் தலைவர்கள் வருகை

5 August 2020, 12:34 pm
yogi
Quick Share

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இடத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர், பா.ஜ.க. நிர்வாகிகள் உமா பாரதி உள்பட பலர் வந்துள்ளனர்.

சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. இதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்னும் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டது.

அதன்படி, இன்று ராமர் கோவிலுக்கான பூமிபூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், கொரோனா வைரஸ் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பகுதிக்கு அடுத்தடுத்து அரசியல் பிரபலங்கள் வந்த வண்ணம் இருந்து வருகின்றனர். அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், உமாபாரதி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

லக்னோ வந்துள்ள பிரதமர் மோடி, விரைவில் அயோத்திக்கு வருகை தர உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் இடம் மட்டுமல்லாமல், நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறியிருந்த உமாபாரதி, பிறகு அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று வருகை தந்திருப்பதாக தெரிவித்தார்.