செப்டம்பர் 30’இல் தீர்ப்பு..! பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!

16 September 2020, 5:00 pm
Babri_Masjid_UpdateNews360
Quick Share

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 30’ஆம் தேதி தனது தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. நீதிபதி எஸ்.கே. யாதவ் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரில் முன்னாள் எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி மற்றும் வினய் கட்டியார் உள்ளிட்ட அனைவரையும் தீர்ப்பு வெளியாகும் பொது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992 டிசம்பர் 6’ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடத்தைக் குறிக்கும் ஒரு பழங்கால கோவிலை அழித்து இந்த மசூதி கட்டப்பட்ட நிலையில், நூற்றாண்டுகளாக நீடித்த இந்த பிரச்சினை, தீவிரமடைந்து 1992 டிசம்பர் 6 அன்று மசூதி இடிப்புக்கு வழிவகுத்தது. 

இது ஒரு பக்கம் இருக்க நிலம் யாருக்குச் சொந்தம் என 50 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவிட்டது. மேலும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் முக்கிய தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் 1992 டிசம்பரில் 15’ஆம் நூற்றாண்டு மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிபிஐ வக்கீல் லலித் சிங் ஊடகங்களிடம், செப்டம்பர் 1’ம் தேதி பாதுகாப்பு மற்றும் வழக்கு விசாரணைகள் முடிவடைந்ததாகவும் பின்னர் சிறப்பு நீதிபதி தீர்ப்பை எழுதத் தொடங்கினார் என்றும் கூறினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி, ஹாஜி மஹ்மூத் அஹ்மத் மற்றும் சையத் அக்லக் ஆகிய இரு அரசு தரப்பு சாட்சிகளின் மனுவை நீதிமன்றம் கடந்த மாதம் நிராகரித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே 400 பக்க எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிபிஐ 351 சாட்சிகளையும் சுமார் 600 ஆவண ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

செப்டம்பர் 30’ஆம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாஜகவின் பல மூத்த தலைவர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் உள்ளது.

Views: - 0

0

0