டூவீலருக்கு 28% ஜிஎஸ்டி வரி தேவையா..? மத்திய அரசு மீது ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 6:50 pm
Quick Share

அதிக வரி மற்றும் கட்டுப்பாடுகளினால் இந்தியாவில் மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்ந்துள்ளதாக பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

புனேவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் ஆலையில் பல்சர் NS400Z எனும் புதிய ரக பைக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தி வைத்த பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், அண்மை காலமாக வாகனங்களின் விலையில் வியத்தகு மாற்றத்திற்கு BS VI மற்றும் ABS விதிமுறைகள்தான் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமில்லாமல் அதிக வரி மற்றும் கட்டுப்பாடுகளினால் மோட்டார் சைக்கிள்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறிய அவர், BS VI மற்றும் ABS கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு, ரூ.71 ஆயிரமாக இருந்த பல்சர் 150 பைக்கின் விலை, தற்போது ரூ. 150,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்தியாவில் ஆட்டோமொபைல்களின் விலையை தேவையற்ற முறையில் அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க: ‘லோன் தவணை தரோம் வாங்க’.. தனியார் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரி அரிவாள் வெட்டு!!

நாம் ஏன் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என கேள்வி எழுப்பிய ராஜீவ் பஜாஜ், பிற ஆசிய நாடுகளில் 8 சதவீதம், 14 சதவீதம்தான் விதிக்கப்படுவதாகவும், இருசக்கர வாகனங்களுக்கான GST வரியை 18% அல்லது 12% ஆக மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த 2019ம் ஆண்டில் 125 சிசி அல்லது அதற்கு மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட பைக்குகளுக்கு ஆன்டி- லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு BS4 விதிமுறைகளை மாற்றியமைத்து, BS6 உமிழ்வு விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயமாக்கி உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.

BS6 போன்ற எரிபொருள் தரநிலைகளை தான் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு 28 சதவீத உச்சபட்ச GST தேவையா? என்று கேள்வி எழுப்பினார். பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்ஸ் ராணியாக இருந்த மேரி-ஆன்டோனெட் பற்றி குறிப்பிட்ட ராஜீவ் பஜாஜ், “நாமும் நம் மக்களையும் கேக் சாப்பிடச் சொல்லப் போகிறோமா?” என கேள்வி எழுப்பினார்.

Views: - 181

0

0