“பெங்காலி பிராமணப் பெண் ரியா”..! தேர்தலுக்காக பிரிவினை அரசியலைக் கையிலெடுத்த வங்க அரசியல் கட்சிகள்..!

11 September 2020, 10:38 am
rhea_updatenews360
Quick Share

சுஷாந்த் தற்கொலை மற்றும் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ரியா சக்ரவர்த்தியை முன்வைத்து மேற்கு வங்க அரசியல் கட்சிகள் வங்காள தேசியவாதத்தைத் தூண்டியுள்ளன. நடிகை ரியா சக்ரவர்த்திக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தின் மூலம் பெங்காலிகள் பாஜகவின் மென்மையான இலக்கு என்பதை நிரூபித்தது என குரலை உயர்த்தி வருகின்றனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறும். அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வங்காள தேசியவாதமும் மெதுவாக ஒரு கூக்குரலாக வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

ஆளும் திரிணாமுல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை கூர்மையான அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பீகார் தேர்தல்களுக்கு முன்னதாக தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு பெங்காலி பெண்ணை மென்மையான இலக்காக பயன்படுத்தியதற்காக பாஜகவை விமர்சித்து வருகின்றன.

இருப்பினும், பாஜக தலைமை இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ரியா சக்ரவர்த்தி எபிசோட் காரணமாக பாஜகவின் உள்ளார்ந்த வெறுப்பு மீண்டும் வெளிப்படையாக வெளிவந்துள்ளது என்று திரிணாமுல் கட்சி தெரிவித்துள்ளது.

“ரியா ஒரு பெங்காலி என்பதால், அவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்பே அவர் பலியானார் என்று நான் நினைக்கிறேன். அவதூறு பிரச்சாரம் மீண்டும் பாஜகவின் வெறுப்பை நிரூபிக்கிறது. அசாம் என்.ஆர்.சி யிலும் இதேபோன்ற ஒன்றை நாங்கள் கண்டோம்.” என மூத்த திரிணாமுல் கட்சித் தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சௌகதா ராய் கூறினார்.

முன்னதாக புதன்கிழமை, மக்களவை காங்கிரஸ் தலைவரும், புதிதாக நியமிக்கப்பட்ட மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ரியா கைது செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரியத என்று விவரித்தார்.

“ரியாவின் தந்தை தேசத்திற்கு சேவை செய்த முன்னாள் இராணுவ அதிகாரி. ரியா ஒரு பெங்காலி பிராமண பெண்மணி. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கான நீதி ஒரு பிஹாரிக்கான நீதி என்று பொருள் கொள்ளக்கூடாது.

ரியாவின் தந்தை தனது குழந்தைகளுக்கு நீதி கோருவதற்கும் உரிமை உண்டு. ஊடகங்களின் விசாரணை என்பது நமது நீதித்துறைக்கு ஒரு அச்சுறுத்தும் அடையாளமாகும். அனைவருக்கும் நீதி என்பது நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும்” என்று அவர் தொடர்ச்சியான ட்வீட்களில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் வங்காளத்தில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் மற்றும் அதிகாரத்திற்கான பிரதான போட்டியாளராக பாஜக எழுந்த பின்னர், திரிணாமுல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வங்காள துணை தேசியவாதத்தை கையிலெடுத்து பாஜகவை வெளியாட்களின் கட்சி என விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் கோலோச்சியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரசும் கூட தற்போது வங்காள தேசியவாதம் எனும் பிரிவினைவாதத்தைக் கையிலெடுத்திருப்பது 2021 சட்டசபைத் தேர்தலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத்தான் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Views: - 0

0

0