பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்… சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை ; தமிழகத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
5 March 2024, 8:34 am
Quick Share

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை விட இது வெடிகுண்டு விபத்துதான் என முதலமைச்சர் சித்தராமையா கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், அவர் இது குறித்து விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர், இதை அரசியலாக பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது, ஓட்டலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் வைத்து சென்ற பையில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடி விபத்தில் காயமடைந்த 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை என்ஐஏவுக்கு மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. என்ஐஏவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளி யார் என்பது விரைவில் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடியிலும், ராமநாதபுரத்தில் 4 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 201

0

0