கரப்பான் பூச்சிக்கு பயப்படும் மனைவி! 3 ஆண்டுகளில் 18 முறை வீடு மாறிய போபால் தம்பதி!

17 April 2021, 3:00 pm
Quick Share

கரப்பான் பூச்சிக்கு பயப்படும் தனது மனைவிக்காக, திருமணமான 3 ஆண்டுகளில் மட்டும் 18 முறை வீடு மாற்றி குடியேறி இருக்கிறார் அவரது கணவர். போபாலில் நடந்த இந்த சம்பவம் நெட்டிசன்களை வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உங்கள் அறையில் ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்கு பயந்தவர்கள் என்றால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுவீர்கள்.. இல்லாவிட்டால், அதனை பிடித்து வெளியே தூக்கி எறிந்து விடுவீர்கள். ஆனால் புதிதாக திருமணம் முடிந்த பெண்ணுக்கு, கரப்பான் பூச்சியை பார்த்தால் பயம் என்ற ஃபோபியா இருக்க, அவருக்காக 18 முறை வீடு மாறி உள்ளார் அவரது கணவர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்த வினோதமான சம்பவத்தில், தம்பதியினர் திருமணமான மூன்று ஆண்டுகளில் 18 வீடுகளை மாற்றியுள்ளனர். சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் பயம் காரணமாக, மற்றவர்களுக்கு முன்னால் சங்கடப்படுவதால், மனம் உடைந்து விவாகரத்து தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணமான புதிதில், வீட்டின் சமையல் அறையில், கரப்பான் பூச்சியை பார்த்து மனைவி காட்டுக்கத்தல் கத்திய போது தான், அவருக்கு இருக்கும் போபியா குறித்து கணவர் தெரிந்து கொண்டிருக்கிறார். அடுத்து வந்த நாட்களில் சமையல் அறைக்குள் நுழைய மறுத்த மனைவி, வேறு வீட்டிற்கு செல்ல வேண்டும் என கணவரை வலியுறுத்தி இருக்கிறார்.

இவர்கள் 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக தங்கள் வீட்டை மாற்றி இருக்கின்றனர். ஆனால் இது ஆரம்பம் மட்டுமே. இதுபோன்ற மற்றொரு சம்பவம் புதுவீட்டிலும் நடந்திருக்கிறது. அப்போதிருந்து இந்த ஜோடி 18 வீடுகளை மாற்றி இருக்கிறது. கணவர் தனது மனைவியை மனநல டாக்டரிடம் அழைத்து செல்ல, டாக்டர் சில மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அந்த மருந்துகளை உட்கொள்ள மனைவி மறுத்துள்ளார்.

மனைவியோ கணவரால் தன் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியவில்லை. மாறாக தன்னை மனநோயாளியாக சித்தரிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்பட்டது போதும் என்ற முடிவுக்கு வந்துள்ள அந்த நபர் தற்போது தனது மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

Views: - 13

0

0