122-121..! பீகார் தேர்தலுக்கு பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள பார்முலா இதுதான்..!

By: Sekar
6 October 2020, 6:41 pm
nitish_kumar_updatenews360
Quick Share

பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் இன்று இறுதி செய்துள்ளன. இதன் மூலம் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பாஜக 121 இடங்களிலும் போட்டியிட உள்ளன.

பீகார் சட்டமன்றத்தில் 243 இடங்கள் உள்ளன. தற்போதுள்ள சட்டமன்றத்தில், ஐக்கிய ஜனதா தளம் 71 எம்.எல்.ஏ.க்களையும், பாஜக 53 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று கூட்டணியில் இருந்து வெளியேறிய எல்ஜேபிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். 143 இடங்களிலிருந்து போட்டியிடுவதாக எல்.ஜே.பி கூறியதுடன், நிதீஷ்குமாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

2005’ல் ஐக்கிய ஜனதா தளம் 139 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும் போட்டியிட்டது. 2010’இல், ஐக்கிய ஜனதா தளம் 141 இடங்களிழும், பாஜக 102 இடங்களிலும் போட்டியிட்டது. 2015’ல் தேர்தல் நடந்தபோது, ​​ஜே.டி.யூ பாஜக கூட்டணியிலிருந்து விலகி மகாகத்பந்தனில் ஒரு அங்கமாக இருந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி தலா 101 இடங்களுக்கு போட்டியிட்டன.

மீதமுள்ள 41 இடங்கள் காங்கிரசுக்கு சென்றன. தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக, எல்ஜேபி, ஆர்எல்எஸ்பி மற்றும் எச்ஏஎம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பாஜக 157 இடங்களிலும், எல்ஜேபி 42. ஆர்.எல்.எஸ்.பி மற்றும் எச்.ஏ.எம் முறையே 23 மற்றும் 21 இடங்களிலிருந்தும் போட்டியிட்டன.

2019 பொதுத் தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்றாக போட்டியிட்டன. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. மீதமுள்ள ஆறு இடங்கள் எல்ஜேபிக்கு சென்றன.

பீகாரில் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும். நவம்பர் 10 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தொகுதி ஒதுக்கீட்டை முன்னரே முடிவு செய்த நிலையில் ஆளும் கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில் இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் ஊடகங்களிடையே உரையாற்றிய முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவருமான நிதீஷ் குமார், ஜித்தன் ராம் மஞ்சியின் எச்.ஏ.எம். கட்சிக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 122 இடங்களில் 7 இடங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதே போல் விஐபி கட்சிக்கு பாஜகவுக்கு வழங்கப்பட்ட இடங்களிலிருந்து தொகுதிகள் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  

Views: - 52

0

0