65 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள்..! பீகார் சட்டசபைத் தேர்தலுடன் நடத்த முடிவு..! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

4 September 2020, 4:47 pm
Election_Commission_of_India_UpdateNews360
Quick Share

நிலுவையில் உள்ள 65 இடைத்தேர்தல்களையும் பீகார் சட்டமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

மத்திய படைகளின் இயக்கம் மற்றும் தளவாட சிக்கல்களை தீர்க்கும் விதமாக ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் ஒரு காலியிடமும், பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றங்களில் 64 காலியிடங்களும் உள்ளன. கொரோனா தொற்றுநோய் மற்றும் அதிகப்படியான மழை காரணமாக பல இடைத்தேர்தல்கள் சமீப காலங்களில் ஒத்திவைக்கப்பட்டன.

பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று முன்னதாக ஒரு கூட்டத்தை நடத்தியது. “தற்போது, சட்டமன்ற / நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல்களுக்கு 65 காலியிடங்கள் உள்ளன. அவற்றில் பல்வேறு மாநிலங்களின் மாநில சட்டமன்றங்களில் 64 காலியிடங்களும், நாடாளுமன்றத்தில் ஒரு காலியிடமும் உள்ளன” என்று தேர்தல் ஆணையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“சில இடங்களில் சாதாரணமாக பெய்யும் கனமழை மற்றும் பிற தடைகள் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, தங்கள் மாநிலங்களில் இடைத்தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி சம்பந்தப்பட்ட பல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்/தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் உள்ளீடுகளை ஆணையம் மதிப்பாய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளது” என்று மேலும் கூறியது.

பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29 அன்று முடிவடைகிறது. இதனால் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பீகார் பொதுச் சபைத் தேர்தல்களும் 2020 நவம்பர் 29’ஆம் தேதிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டியவை என்பதைக் கருத்தில் கொண்டு, 65 இடைத்தேர்தல்கள் மற்றும் பீகார் பொதுச் சபைத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

பீகார் பொதுச் சபை தேர்தல்களின் அட்டவணை அறிவிப்பு மற்றும் இந்த இடைத்தேர்தல்களுக்கான அட்டவணை தேர்தல் ஆணையத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்” என்று அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0