பீகாரில் அமைச்சரவை இலாகா பட்டியல் வெளியீடு..! ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களைப் பெற்ற பாஜக..!

17 November 2020, 4:42 pm
nitish_kumar_portfolio_updatenews360
Quick Share

ஏழாவது முறையாக பீகார் முதல்வராக நிதீஷ் குமார் நேற்று பதவியேற்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் உயர் தலைவர்கள் முன்னிலையில் அவர் முதல்வராக பதவியேற்றார். 

நிதீஷ் குமார் தவிர, 14 அமைச்சர்களும் அப்போது பதவியேற்றனர். அதில் 7 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 6 பேர் ஐக்கிய ஜனதா தளத்தைச் (ஜே.டி.யு.) சேர்ந்தவர்கள் ஆவர். புதிய அரசாங்கத்தில் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா மற்றும் விஐபி கட்சிக்கு தலா ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. நிதீஷ் குமார் மற்றும் இதர அமைச்சர்கள் ஆளுநர் பாகு சவுகானால் ராஜ் பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று, புதிய அமைச்சரவை நவம்பர் 23 முதல் பீகார் சட்டமன்றத்தின் ஐந்து நாள் அமர்வுக்கு ஒப்புதல் அளிக்க பாட்னாவில் கூடியது. 17’வது சட்டமன்றத்தின் முதல் அமர்வு மற்றும் 196’வது அமர்வின் கூட்டத்தை கூட்டும் சட்டமன்ற விவகாரத்துறையின் முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நவம்பர் 23 முதல் நவம்பர் 27 வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, முதலமைச்சர் நிதீஷ் குமார் தனது அமைச்சர்களுக்கு இலாகாவையும் அளித்துள்ளார். அமைச்சர்களின் இலாகாக்கள் பட்டியல் பின்வருமாறு :

நிதீஷ் குமார் (ஜே.டி.யு) – முதலமைச்சர், உள்துறை, பொது நிர்வாகம், விஜிலென்ஸ் மற்றும் எந்தவொரு அமைச்சருக்கும் விநியோகிக்கப்படாத அனைத்து துறைகளும்

தர்கிஷோர் பிரசாத் (பாஜக) – துணை முதலமைச்சர், நிதி, வணிக வரி, சுற்றுச்சூழல் மற்றும் வன, தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, நகர அபிவிருத்தி

ரேணு தேவி (பாஜக) – துணை முதலமைச்சர், பஞ்சாயத்து ராஜ், பின்தங்கிய சாதி மேம்பாடு மற்றும் ஈபிசி நலன், தொழில்

விஜய் சவுத்ரி (ஜே.டி.யு) – கிராமிய பொறியியல் துறை, ஆட்சியாளர் மேம்பாட்டுத் துறை, நீர்வளம், தகவல் மற்றும் ஒளிபரப்பு, சட்டமன்ற விவகாரங்கள்

பிஜேந்திர யாதவ் (ஜே.டி.யு) – ஆற்றல், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்

மேவலால் சவுத்ரி (ஜே.டி.யு) – கல்வித் துறை

அசோக் சவுத்ரி (ஜே.டி.யு) – கட்டிட கட்டுமானத் துறை, சிறுபான்மை நலத்துறை, சமூக நலன்

ஷீலா மண்டல் (ஜே.டி.யு) – போக்குவரத்து

மங்கல் பாண்டே (பாஜக) – சுகாதாரம், சாலை, கலை மற்றும் கலாச்சாரம்

ராம்பிரீத் பாஸ்வான் (பாஜக) – பொது சுகாதார பொறியியல் துறை

அமரேந்திர பிரதாப் சிங் (பாஜக) – விவசாயம், கூட்டுறவு, கரும்பு

ஜிவேஷ் மிஸ்ரா (பாஜக) – சுற்றுலா, தொழிலாளர், சுரங்கங்கள்

ராம் சூரத் ராய் (பாஜக) – வருவாய், சட்டம்

சந்தோஷ் மஞ்சி (ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா) – சிறு நீர்ப்பாசனம், எஸ்சி / எஸ்டி நலன்

முகேஷ் சாஹ்னி (விஐபி) – கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம்

சட்ட விதிகளின்படி, பீகாரில் முதல்வர் உட்பட அதிகபட்சம் 36 அமைச்சர்கள் இருக்க முடியும். சட்டமன்றத்தின் மொத்த பலத்தில் மாநிலத்தில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 15%’ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது என்று விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும் என பீகார் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.