பீகார் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை..? இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதி..!

23 August 2020, 6:14 pm
ELECTION_COMMISSION_UpdateNews360
Quick Share

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பீகாரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் சரியான நேரத்தில் நடைபெறும் என்று, கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்தல்களை ஒத்திவைக்க சில அரசியல் கட்சிகள் கோரியுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29’ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

“பீகார் தேர்தல் நிச்சயமாக சரியான நேரத்தில் நடக்கும்” என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்குமாறு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமான லோக் ஜனசக்தி கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

என்.சி.பி, தேசிய மக்கள் கட்சி போன்ற வேறு சில கட்சிகளும் தேர்தலை ஒத்திவைக்கக் கோரியுள்ளன.

வரவிருக்கும் பீகார் தேர்தல்களுக்கும், வேறு சில இடைத்தேர்தல்களுக்கும் தொற்றுநோய்களின் போது பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த பரிந்துரைகளைக் கோரி தேர்தல் ஆணையத்தின் கடிதத்திற்கு அரசியல் கட்சிகள் சமீபத்தில் பதிலளித்திருந்தன.

கடந்த வாரம், இந்திய தேர்தல் ஆணையம் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான பரந்த வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈ.வி.எம்) பொத்தான்களை அழுத்துவதற்கு வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்கப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வாக்குப்பதிவு நாளின் கடைசி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தனி வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். வாக்குப்பதிவு நிலையங்களுக்கு, வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக கட்டாய சுத்திகரிப்பு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியின் நுழைவு இடத்திலும் தெர்மல் ஸ்கேனர்கள் வைக்கப்படும். துணை மருத்துவ ஊழியர்கள் வாக்குச் சாவடியின் நுழைவு இடத்தில் வாக்காளர்களின் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனேர்கள் மூலம் சோதிப்பார்கள்.

சட்டசபை காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்களை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் சான்றிதழைக் கோருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாத நிலையில் மாநில அரசு பின்னர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0