விஐபி கட்சிக்கு 11 இடங்களை அள்ளிக் கொடுத்த பாஜக..! பீகார் தேர்தலில் புதிய திருப்பம்..!

By: Sekar
7 October 2020, 4:51 pm
Bihar_BJP_UpdateNews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீடு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, பாரதீய ஜனதா இன்று தனது ஒதுக்கீட்டில் இருந்து விகாஷீல் இன்சான் கட்சிக்கு (விஐபி) 11 இடங்களை ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.

பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (எச்ஏஎம்) மற்றும் விஐபி என நான்கு கட்சிகள் தற்போது என்டிஏ கூட்டணியில் இருப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்தார்.

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், பாஜகவுக்கு 121 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 122 இடங்களும் இருக்கும் என்று நேற்று அறிவித்தார். ஐக்கிய ஜனதா தளம் தனது ஒதுக்கீட்டில் இருந்து ஜிதான் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 7 இடங்களை வழங்கியுள்ளது என்று அவர் அப்போது கூறினார்.

இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ், இன்று ட்விட்டரில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தனது கட்சி தனது ஒதுக்கீட்டில் இருந்து விஐபிக்கு 11 இடங்களை வழங்கியுள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து பாலிவுட் முன்னாள் செட் வடிவமைப்பாளர் முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிடும். முன்னதாக அக்டோபர் 3’ம் தேதி பீகாரில் உள்ள எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தனில் இருந்து சாஹ்னி வெளியேறினார். இதற்கடுத்து ஒரு நாள் கழித்து, விஐபி மாநிலத்தின் அனைத்து 243 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதாக சாஹ்னி அறிவித்திருந்தார்.

எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு அவர் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு தனது நிலையை மாற்றிக்கொண்டதும் பின்னர் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததும்  அதன் பின் ஏற்பட்ட திருப்பங்களாகும்.

Views: - 41

0

0