ஆந்திரா அருகே நடந்த விநோத தடியடி திருவிழா : 23 கிராமங்களுக்குள் நடந்த போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் காயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 1:28 pm
Clashi Function -Updatenews360
Quick Share

ஆந்திரா : கர்னூல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நடத்திய தடியடி திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவர்கட் மலையில் புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. மல்லேஸ்வர சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

கல்யாண உற்சவம் முடிந்தபின் உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியை சேர்ந்த 23 கிராம மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக்கொள்வது வழக்க்கம். மோதலில் வெற்றிபெறும் குழுவை சார்ந்தவர்கள் உற்சவ மூர்த்திகளை கைப்பற்றி செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு மல்லீஸ்வரர் கோவிலில் கல்யாண உற்சவத்தை தொடர்ந்து தடி அடி திருவிழா நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 23 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கைகளில் தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்திய நிலையில் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக் கொண்டனர்.

பக்தி மனநிலையில் உற்சவ மூர்த்திகளை கைப்பற்ற வேண்டுமென்ற ஆவேசத்தில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றொரு குழுவினர் மீது தடிகளால் தாக்கி கொண்டனர். இந்த தடியடி உற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் சிலர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அருகிலுள்ள ஆதோனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு தடியடி உற்சவம் நடத்தப்படுகிறது.

எனவே அதனை பக்தர்களின் ஒப்புதலுடன் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் இருபத்தி மூன்று கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர்.

ஆனாலும் அவர்கள் தடியடி உற்சவத்தை கைவிட தயாராக இல்லை. எனவே தேவையான அளவில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Views: - 192

0

0