கேரள முதல்வர் ராஜினாமா செய்ய பாஜக வலியுறுத்தல்.! மத்திய இணை அமைச்சர் உண்ணாவிரதம்.!!

2 August 2020, 2:08 pm
Pinarayi Vijayan - Updatenews360
Quick Share

டெல்லி : தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சருக்கும் தொடர்புள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என மத்திய இணையமைச்சர் முரளிதரன் உண்ணவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கேரளாவில் சில தினங்களுக்கு முன் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை பதவியில் இருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த சம்பவத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்வப்னாவின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிந்தது.

இதையடுத்து, அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவரிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சியில் விற்க முயன்றது தெரிய வந்தது. முன்னதாக தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது குற்றச்சாட்டுகள் உறுதியாகின.

இந்த நிலையில் கேரள முதலமைச்சரின் அதிகார வட்டத்தின் கீழ் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அவர் தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அரசு இல்லத்தின் முன்பு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.

இந்த விவகாரத்தில் தீவிரவாத இயக்கங்களுக்கும் பணம் போவதாக கூறப்படும் நிலையில், விசாரணை நடத்த ஏதுவாக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாஜ தேசிய செயலாளர் முரளிதர் ராவ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.