“இது ஒருவழிப் பாதை, பாஜகவை விட்டு வெளியே செல்பவர்கள் நிம்மதியாக வாழ மாட்டார்கள்” : சுஷில் குமார் மோடி

30 November 2020, 11:01 am
sushil_kumar_modi_updatenews360
Quick Share

பாஜகவில் இருப்பது என்பது ஒரு வழிப் பாதை போன்றது என்றும், கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ மாட்டார்கள் என்றும் பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

பீகாரில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மோடி, தானோ அல்லது வேறு எவரோ ஆனாலும் கட்சியில் சேர்ந்தவுடன் பாஜகவை விட்டு வெளியேற முடியாது என்று கூறினார்.

“எங்கள் கட்சி பாஜக ஒரு வழி போக்குவரத்து போன்றது. நீங்கள் இங்கு வரலாம், ஆனால் இங்கிருந்து செல்ல முடியாது. பாஜகவை விட்டு வெளியேறுபவர்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழ மாட்டார்கள். நான் பீகார் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றாலும், எனது ஆத்மா தற்போதைய அரசாங்கத்திற்குள் வாழ்கிறது. எங்கள் கட்சி எப்போதும் பலவீனமடைய அனுமதிக்கக்கூடாது.” என்று பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி கூறினார்.

பாஜகவின் மாநிலங்களவை வேட்பாளராக சுஷில் குமார் மோடி :

லோக் ஜனசக்தி கட்சி நிறுவனர் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இறந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 8’ஆம் தேதி முதல் பீகாரில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக சுஷில் குமார் மோடியை பாஜக கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்தது.

ஆர்.ஜே.டி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தால், டிசம்பர் 14 அன்று இந்த இடத்திற்கு தேர்தல் நடைபெறும்.

சுஷில் மோடிக்கு பதிலாக புதிய துணை முதல்வர் :

15 ஆண்டுகளுக்கு மேலாக பீகார் துணை முதல்வராக பணியாற்றிய சுஷில் குமார் மோடி, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய பீகார் அமைச்சரவையில் தக்கவைக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பாஜக தலைவர்களான தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இருவர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.

மத்திய அமைச்சரவையில் இடம் ?

கட்சித் தொண்டராக தனது பதவியை யாரும் பறிக்க முடியாது என்று அவர் முன்பு கூறியிருந்தார். “40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், பாஜகவும் சங்க பரிவாரும் வேறு எந்த நபருக்கும் கொடுத்ததை விட எனக்கு இவ்வளவு கொடுத்துள்ளன. எதிர்காலத்திலும், எனக்கு கிடைக்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவேன். கட்சி தொண்டராக எனது பதவியை யாரும் பறிக்க முடியாது.” என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் உறுதிசெய்யப்பட்டுள்ளதால் தான், அவர் மாநிலங்களவை மூலம் எம்பியாக்கப்படுகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0